

சென்னை: ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திதார்.
அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, "5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கி உள்ளனர். நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை காக்கும் வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லி உள்ளோம். முதல்வரின் அரசு சார்பில் வழக்கறிஞர்கள் பல்வேறு கருத்துகளை நல்ல முறையில் எடுத்து வைத்தனர். நீதிபதிகள் அதை சிறந்த முறையில் ஏற்றுக் கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளனர். இது முதல்வரின் அரசு எடுத்த சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
இது தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுடன் இணைந்த ஒன்று. இதை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. பாரம்பரியமாக இந்த விளையாட்டுகள் நடந்து வந்து உள்ளன. இது தமிழர்களின் கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்று. இது போன்ற தமிழக அரசின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் தற்போது ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது." என்று கூறினார்.