Published : 18 May 2023 11:33 AM
Last Updated : 18 May 2023 11:33 AM

மத்திய அமைச்சரவை மாற்றம்: சட்ட அமைச்சர் பதவியிலிருந்து கிரண் ரிஜிஜு நீக்கம்

கிரண் ரிஜஜூ | கோப்புப்படம்

புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்ககு அர்ஜுன் ராம் மேக்வாலை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய இணையமைச்சராக இருக்கும் அர்ஜுன் மேக்வால், தற்போது பார்த்துவரும் இலாக்காக்களுடன், சட்டம் மற்றும் நீதித்துறையின் அமைச்சராக செயல்படுவார்.

மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கிரண் ரிஜிஜு மத்திய புவி அறிவியியல் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவர் பொறுப்பு வகித்து வந்த சட்டம் மற்றும் நிதித்துறைக்கு மத்திய இணையமைச்சராக இருக்கும் அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்படுகிறார். அவர் தற்போது தான் பார்த்துவரும் துறைகளுடன் சட்டத்துறை அமைச்சராகவும் செயல்படுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரண் ரிஜிஜுவுக்கு பின்னடைவு.. இந்த அதிரடி அமைச்சரவை பொறுப்பு மாற்றம் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ஒரு உயர்வு தான் என்றாலும், அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கிரண் ரிஜிஜுவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

கிரண் ரிஜிஜு, நீதிபதிகளை நியமிக்க தற்போது நடைமுறையில் உள்ள கொலிஜீயம் முறைக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதே நேரத்தில், ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் தேசவிரோத குழுக்களின் பகுதியாக இருப்பதாக கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த அதிரடி மாற்றம் குறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பக்கதில் மத்திய அரசை தாக்கியுள்ளார். அவருடைய பதிவில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல்,"இந்த மாற்றம் மகாராஷ்டிரா தீர்ப்பின் அவமானத்தினாலா? அல்லது மோதானி - செபி விசாரணையா?" என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அல்கா லாம்பா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில்,"சில காலமாக சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து தெரிவித்து வந்த கருத்துக்களும், நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட்டு வந்ததும் மோடி அரசுக்கு பிரச்சினையை உருவாக்கி வந்தது. மத்திய அரசு அதன் சட்ட அமைச்சரை பலிகொடுத்து தனது இமேஜை காப்பற்றியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x