சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குமரேசன், சுந்தர்ராஜ் மற்றும் அய்யம்மாள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருளாயி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இருளாயிக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in