Published : 14 May 2023 01:44 PM
Last Updated : 14 May 2023 01:44 PM

கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழப்பு - குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.

கள்ளாச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவிஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய இதர குற்றவாளிகளைத் தேடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x