Published : 22 Oct 2017 11:06 AM
Last Updated : 22 Oct 2017 11:06 AM

ம.கோபாலகிருஷ்ணய்யர் பற்றிய இலக்கிய அரங்கம் நடக்கிறது

தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றிய ம.கோபாலகிருஷ்ண ஐயர் குறித்த இலக்கிய அரங்கம், சாகித்ய அகாடமி சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை நடக்க உள்ளது.

20-ம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றியவர்களில் முக்கியமானவர் ம.கோபாலகிருஷ்ண ஐயர் (ம.கோ). கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், பத்திரிகை, இலக்கிய இதழ்கள் என பல்வேறு தளங்களில் இயங்கிய பன்முகத் திறமை கொண்டவர். மதுரா கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைமைப் பேராசிரியராக இருந்தார். மாணவர்கள் மனதில் தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் ‘மதுரை மாணவர் செந்தமிழ் சங்கம்’ என்ற அமைப்பை 1901-ல் தொடங்கினார். மதுரை தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராகவும், ஆய்வாளராகவும் இருந்துள்ளார்.

இளைஞர்களிடம் தாய்நாடு, தாய்மொழி மீதான பற்றை வளர்க்க, தனது ஆசிரியர் தொழிலையும், தான் நடத்திவந்த இதழ்களையும் பயன்படுத்தினார். 1896 முதல், இவர் எழுதிய கட்டுரைகள், பத்திரிகைகளில் பிரசுரமாகின. அப்போது அவருக்கு 20 வயதுகூட நிரம்பியிருக்கவில்லை. இவரது கட்டுரைகளின் தொகுப்பு ‘அரும்பொருட்திரட்டு’ என்ற பெயரில் மதுரை தமிழ்ச் சங்கத்தால் 1915-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. 1927-ல் மறையும் வரை தொடர்ந்து எழுதிவந்தார். ‘விவேகோதயம்’, ‘நச்சினார்க்கினியன்’ ஆகிய இலக்கிய இதழ்களை அவரே ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.

தாகூர், உ.வே.சாமிநாத ஐயர், பரிதிமாற்கலைஞர், வள்ளல் பாண்டித்துரை தேவர் உள்ளிட்ட அறிஞர்கள் பற்றிய இவரது கவிதைகள் தொகுப்பு ‘தனிப்பாடல்கள்’ என்ற புத்தகமாக வந்துள்ளது. அறிவியல், வரலாறு, சுகாதாரம், தேசப்பற்று, கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் தனித்தனியாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ‘விஸ்வநாதன்’ என்ற செய்யுள் நாடகத்தையும், ‘மவுன தேசிகர்’ என்ற வரலாற்றுப் புனைவு நகைச்சுவை நாடகத்தையும் எழுதியுள்ளார்.

தமிழுக்கும், தமிழருக்கும் இவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில், சாகித்ய அகாடமி மற்றும் சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை சார்பில் ம.கோபாலகிருஷ்ண ஐயர் குறித்த இலக்கிய அரங்கம், சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் உள்ள பவள விழா கலையரங்கில் நாளை மதியம் 2 மணிக்கு நடக்க உள்ளது. சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் இ.சுந்தரமூர்த்தி தலைமை ஏற்கிறார். ஆந்திரா - தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்புரையாற்றுகிறார். சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித் துறை தலைவர் ய.மணிகண்டன், தெ.ஞானசுந்தரம், வ.வே.சுப்பிரமணி யன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x