Published : 08 May 2023 06:55 AM
Last Updated : 08 May 2023 06:55 AM
பல்லாவரம்: தமிழகத்தை முன்னேற்றிய திராவிடவியல் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி, துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி எம்எல்ஏ, து.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் வெ. விசுவநாதன் முன்னிலை வகித்தனர்.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: தமிழகத்தில் 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசு, தற்போது 2-ம் ஆண்டை நிறைவுசெய்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக பாழ்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியன் ஆட்சி. திராவிடம் யாரையும் பிரிக்காது; அனைவரையும் அரவணைக்கும்.
திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தைக் காலாவதியாக்கியதுதான் திராவிடம். வர்ணாசிரமத்தை காலாவதியாக்கியது திராவிடம். ஆரியப் படையெடுப்புகளை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். எனவேதான், அதைப் பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்.
தனிப்பட்ட நட்புக்காக நான் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன். கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பேன். ஆளுநர் உடனான எனது தனிப்பட்ட நட்பு வேறு; எங்களது கொள்கை வேறு. மிசா, பொடா,தடா உள்ளிட்டவற்றை எல்லாம் நாங்கள் பார்த்தவர்கள்.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மூலமாக ஒரு கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 355 பேர் பயனடைந்துள்ளனர். நாங்கள் சொன்னதைச் செய்ததால்தான் கடந்த 2 ஆண்டுகளில் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளோம். இன்னும் சொல்லப்போனால், சொல்லாததையும் செய்திருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில், சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலம் அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகஇல்லை என்று ஆளுநர் கூறியிருக்கிறார். பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறதே, அதுபோல தமிழ்நாடு பற்றி எரிகிறதா? கோவையில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில், சில மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டோம். குற்றவாளிகளைக் கைது செய்தோம்.
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறைச் சம்பவத்தில் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து,துப்பாக்கிச் சூடு இல்லாமல்வன்முறையைக் கட்டுப்படுத்தியது காவல் துறை. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தால், அதையும் ஆளுநர் குறையாகச் சொல்வார்.
சிதம்பரத்தில் நடந்த குழந்தைத் திருமணங்கள் தொடர்பான வழக்கை முன்வைத்து, தமிழக அரசுக்கு ஆளுநர் ஒரு கடிதம் அனுப்பினார். அவருக்கு அப்போதே பதில் கடிதம் அனுப்பிவிட்டோம்.
மதுரையில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்கள்தான் வாங்குகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளின் புத்தகங்களையும் வாங்க வேண்டுமாம். குஜராத் மாநில நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்களை வைப்பார்களா? நாகாலாந்தில் ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்தாரே, அங்குள்ள நூலகத்தில் அனைத்து மொழிப் புத்தகங்களையும் வைக்குமாறு வலியுறுத்தி னாரா?
தமிழ்நாட்டை முன்னேற்றிய திராவிடவியல் கோட்பாட்டை, இந்தியா முழுவதும் கொண்டுசேர்ப்போம். ஒன்றிய அளவில் ஒற்றுமையை உருவாக்கி, உன்னதமான அரசை தலைநகர் டெல்லியிலும் அமைப்போம். அதற்கான மக்களவைத் தேர்தல் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் தயாராவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை தீர்மானக் குழுச் செயலாளர் மீ.அ.வைத்தியலிங்கம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எழிலரசன், பம்மல் தெற்கு பகுதி செயலாளர் வே.கருணாநிதி, பல்லாவரம் மண்டலக் குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆர்.மனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியப் பொருளாளர் எறையூர் பா.பரமசிவம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மல்லிகா ரவிச்சந்திரன், கோமதி கணேஷ்பாபு மற்றும் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மாவட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் பரிசாக அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT