Published : 07 May 2023 06:39 PM
Last Updated : 07 May 2023 06:39 PM

இரவு நேரத்தில் இயங்கும் உயிரியல் பூங்கா: வனத்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல் 

தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: இரவு நேரத்தில் இயங்கும் உயிரியல் பூங்கா தொடங்குவதற்கான பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ளுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தினார்.

வனத்துறை சார்பாக நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சென்னை, பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட ஆமை பொறிப்பகத்தில் உள்ள ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது. கடல் ஆமைகள் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்கேற்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று தலைமை செயலாளர் தெரிவித்தார்.

மேலும், பள்ளிக்கரனை சுற்றுச்சூழல் பூங்கா மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட தலைமைச் செயலாளர், 14 ராம்சார் தளங்களையும் இயற்கையாக பாதுகாத்திட தேவையற்ற களைச் செடிகளை அகற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, வனப் பகுதியில் வனப் பாதுகாவலர்களுக்கு வழங்கப்படவுள்ள (e-bike) மின் மோட்டார் பொருத்திய இரு சக்கர வாகனங்களையும் பார்வையிட்டார்.

இதன்பிறகு, வண்டலூர் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு (பயிற்சி மற்றும் ஆராய்ச்சி) நிறுவனத்தில் ரூ.7.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான பயிற்சி விடுதி மற்றும் வன உயிரினங்கள் ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வகங்களை( DNA Sequence Lab, Histo pathology Lab, Genetic Analizer) ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வன உயிரினங்கள் மீட்பு ( தொடர் சிகிச்சை) மையத்தில் வன உயிரினங்கள் பராமரிக்கப்படுவதையும், இரவு நேரத்தில் இயங்கும் உயிரியல் பூங்கா தொடங்குவதற்கான பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வாகன நிறுத்துமிட வளாகத்தில், பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டபோது ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்துள்ளதையும், பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் 2021..23ம் ஆண்டுகளில் 2 கோடியே 84 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், 2023..24ம் ஆண்டில் 7 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். பூங்கா வளாகத்தில் மழைநீரை சேகரித்திட அமைக்கப்பட்டுள்ள ஏரி பராமரிப்பையும் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x