Last Updated : 07 May, 2023 05:02 PM

 

Published : 07 May 2023 05:02 PM
Last Updated : 07 May 2023 05:02 PM

ஜிப்மரை கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து எம்.பி.க்களுக்கும் உண்டு: தமிழிசைக்கு நாராயணசாமி பதில்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள ஜிப்மரை கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து எம்.பிக்களுக்கும் உண்டு. ஆளுநராக இருக்க தமிழிசைக்கு தகுதியில்லை என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்தும், சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த 5-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அதன் தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது நியாயமான கோரிக்கை. ஏற்கெனவே ஜிப்மரை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்கிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, தேவையான நிதியை கொடுத்து ஜிப்மரை சிறப்பாக நடத்தி வந்தோம். தற்போது ஜிப்மர் தரம் குறைந்துள்ளது. தகுதியான மருத்துவர்கள் இல்லை. யார் சிகிச்சைக்கு சென்றாலும், குடும்ப அட்டையை காண்பியுங்கள் என்று கேட்கும் நிலை உள்ளது. இதனால் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். விசிக சார்பில் நடந்த போராட்டத்தில் மக்கள் பிரச்சினையைப் பற்றி திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் பேசினர். ஆனால் ஆளுநர் தமிழிசையோ ஆவேசமாகவும், தனது தரத்தை குறைத்து, தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான நிதி நாடாளுமன்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. அதற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு விழுப்புரம் எம்.பியும் கையெழுத்து போட்டுள்ளார். மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள ஜிப்மரை கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து எம்.பிக்களுக்கும் உண்டு. விவரம் தெரியாமல் சிறுபிள்ளைத் தனமாக ஆளுநர் பேசியது வேதனை தருகிறது. ஒரு எம்.பியை தரம் தாழ்ந்து பேசி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் அவர் ஆளுநராக இருக்க தகுதியில்லை. ஒரு தவறை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் வேலை. அப்படி சுட்டிக்காட்டும் போது, தவறை சரி செய்ய வேண்டும். இதற்கு ஜிப்மர் நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும்.

ஆளுநர் வந்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஜிப்மருக்கு வந்து பார்வையிட்டார். அப்போது, காங்கிரஸ் எம்பி, ஜிப்மர் ஊழியர்கள், மக்கள் என அனைவரும் அவரிடம் புகார் தெரிவித்தனர். ஜிப்மர் நிர்வாக சீர்கேடுகளை எடுத்து சொல்ல வேண்டிய கடமை, பொறுப்பு எங்களுக்கு உண்டு. அதை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு மத்திய அமைச்சருக்கும், ஜிப்மர் இயக்குநருக்கும் உண்டு. ஜிப்மரை பற்றி பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன அவசியம். இவர் என்ன ஜிப்மர் இயக்குநரா?

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஊதுகுழலாக உள்ளார். ஆளுநர் தமிழிசை புதுச்சேரி மாநில பாஜக செயலாளராக செயல்படுகிறார்கள். அவர் துணைநிலை ஆளுநர் பொறுப்பை மட்டும் பார்க்கட்டும். ஜிப்மரை பற்றி பேசுவதற்கு விழுப்புரம் எம்.பிக்கும் உரிமை உண்டு. ஆளுநர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். தேவையில்லாத கருத்துகளை கூறக் கூடாது. வெளியில் பேச வேண்டும் என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேட்டி கொடுங்கள். பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக ஆட்சியில்லாத மாநில முதல்வர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் ஆளுநர்களை செயல்பட வைக்கின்றனர்.

ரங்கசாமியை அண்ணன் என கூறிக்கொண்டு எந்த கோப்புக்கும் கையெழுத்து போடுவதில்லை. அண்ணன், தங்கை இருவரும் எந்த வேலையும் செய்வதில்லை. மாநிலத்தில் நிதி பற்றாக்குறை. எப்போது இந்த அரசு திவாலாகும் என்ற தெரியவில்லை. தெலங்கானாவில் விமானம் தர மறுக்கின்றனர். அதனால் உண்டியலில் வசூல் செய்து தனி விமானம் ஏற்பாடு செய்து தருகிறோம். விமானத்தில் தெலங்கானாவுக்கு சென்றுவிடுங்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. புதுச்சேரியில் தான் சட்டம், ஒழுங்கு சரியில்லை. ஜிப்மர் நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x