Published : 06 May 2023 03:08 PM
Last Updated : 06 May 2023 03:08 PM

“இரு விரல் பரிசோதனை செய்யப்படவே இல்லை” - ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்ட மறுப்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப்படம்

செங்கல்பட்டு: "சிறுமிக்கு இரு விரல் பரிசோதனை நடந்ததாக தமிழக ஆளுநர் சொல்லியிருக்கிறார். அச்சமயத்தில் சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனை படிவமும் ஆய்வு செய்யப்பட்டது. அப்படிவத்தில் Two finger test என்று சொல்லக் கூடிய இரு விரல் பரிசோதனை அச்சிறுமிக்கு செய்யவில்லை என்று தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "அண்மையில் தமிழக ஆளுநர் பல்வேறு துறைகள் குறித்து தன்னுடைய பூதக்கண்ணாடியின் மூலம் குறைகளைக் கண்டறிவது எப்படி என்று தேடித்தேடி அலசி ஏதோ ஒன்றை சொல்ல வேண்டும் என்பதற்காக அரசின் மீது குறைகளை கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு புகார்களை சொல்லியிருந்தார். அதற்கு தொடர்ச்சியாக நாங்கள் அத்தகைய புகார்களுக்கு பதில்களை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளில் இல்லை என்ற குற்றச்சாட்டை நேற்றைக்கு முன்தினம் மறுத்து அது சம்பந்தமாக பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதே செய்தித்தாளில் ஆளுநர் இன்னொரு புகார் குறித்தும் தன்னுடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார். அது குறித்தான விளக்கத்தை நேற்றைக்கு சம்பந்தப்பட்ட காவல் துறையின் தலைவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள் என்றாலும், துறையின் சார்பிலும் விளக்க வேண்டியது என்பது அவசியமாக இருக்கிறது.

அந்தவகையில் ஆளுநர் தமது பேட்டியில், சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் தொடர்பான விவகாரத்தில், அதாவது இரு விரல் பரிசோதனை நடந்ததாக கூறியுள்ளார். அதாவது நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவது என்பது ஆளுநர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றது அல்ல. அதாவது, அவரது கூற்று தவறானது என்று உறுதிப்படுத்துவது இத்துறைக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே, அவர் கூறிய குற்றச்சாட்டை ஏற்று குழந்தைகளின் உரிமைக்கான தேசிய ஆணையம், தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி ஒரு வாரத்துக்குள் அதற்கான பதிலை அனுப்ப அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

ஆளுநர் அந்தச் சிறுமிக்கு இரு விரல் பரிசோதனை நடந்ததாக சொல்லியிருக்கிறார். இதுகுறித்து மருத்துவ அலுவலர்கள் விசாரித்தனர். மேலும், அச்சமயத்தில் சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை படிவமும் ஆய்வு செய்யப்பட்டது. அப்படிவத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. Two finger test என்று சொல்லக் கூடிய இரு விரல் பரிசோதனை அச்சிறுமிக்கு செய்யவில்லை என்று தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது.

எனவே, ஆளுநரால் அரசின் மீது வைத்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டு, நான் ஏற்கெனவே சொல்லியதுபோல் பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் அவருக்கு ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டு கிடைக்கவில்லை. பாவம் ஒரு சிறுமியை சாட்சிக்கு அழைத்திருக்கிறார். இக்குற்றச்சாட்டு இல்லை என்று ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டிருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியில், "சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக 8 பேர் மீது புகார்களை அளித்தனர். தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று புகார் கூறினர். 6, 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, 'இரு விரல் பரிசோதனை' என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொடுமைகளால் அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x