Published : 05 May 2023 05:36 AM
Last Updated : 05 May 2023 05:36 AM

தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு

சென்னை: தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் ஷைன் சினிமா நிறுவனம் தயாரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இன்று (மே 5) வெளியாகஉள்ளது. இந்த படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில், சென்னை ராயபுரத்தை சேர்ந்த அரவிந்தாக் ஷன் என்பவர், இப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

‘எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லாமல், அதிகாரப்பூர்வமான தகவல்களும் இல்லாமல், உண்மை சம்பவம் என்ற போர்வையில், ஒரு குறிப்பிட்ட மதத்தை குற்றம்சாட்டி, நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாக ஏற்கெனவே உளவுத்துறையும் எச்சரித்துள்ளது. எனவே, இந்திய இறையாண்மை, பொது அமைதி மற்றும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இந்த படத்தின் டீசர் வெளியீட்டில் உண்மைக் கதை என கூறிவிட்டு, பேட்டிகளின்போது கற்பனைக் கதை என கூறுகின்றனர்” என வாதிடப்பட்டது.

படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், “இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கற்பனை கதை. ஏற்கெனவே இந்த படத்தை மத்திய தணிக்கை வாரியம் பலமுறை பார்த்துவிட்டுதான் தணிக்கை சான்றிதழ் அளித்துள்ளது. ஆட்சேபத்துக்குரிய 14 காட்சிகளை நீக்கி விட்டோம். இந்த படம் கேரளாவில் வெளியிடப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ஏன் தடை விதிக்கப்பட வேண்டும்” என வாதிடப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில், “இந்த பட விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே கேரள உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இப்படத்துக்கு தமிழக அரசு ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை” என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இந்த படம் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

திரையரங்குகளுக்கு பாதுகாப்பு: இதனிடையே, டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் போதிய அளவில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். படம் பார்க்க வருவோரை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏதேனும் போராட்டம் நடைபெற்று வன்முறை ஏற்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x