Published : 02 May 2023 07:00 AM
Last Updated : 02 May 2023 07:00 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதியை கனிமொழி எம்.பி. நேற்று வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துபிரான்சிஸ் (53). ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பாக முறப்பநாடு காவல் நிலையத்தில் இவர் புகார் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கடந்த 25-ம்தேதி லூர்து பிரான்சிஸ் அலுவலகத்துக்குள் புகுந்து அவரை கொலை செய்தனர். கொலை தொடர்பாக மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் பொது நிவாரண நிதி: கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி உதவித் தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி நிவாரண உதவித் தொகை ரூ.1 கோடிக்கான காசோலையை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, லூர்து பிரான்சிஸ் வீட்டுக்கு சென்று அவரது மனைவிபொன்சிட்டாளிடம் நேற்று வழங்கினார்.
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உடனிருந்தனர்.
பின்னர் கனிமொழி எம்.பி.செய்தியாளர்களிடம் கூறும்போது, “ நேர்மையான அதிகாரி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணல் கொள்ளையை தடுக்க: கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். முறப்பநாடு பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க ஆட்சியர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT