Published : 30 Apr 2023 04:21 AM
Last Updated : 30 Apr 2023 04:21 AM
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் பி.பெ.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காந்தி சிலை, மரப்பாலம் அண்ணா டெக்ஸ்மேடு ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இதில், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று, குடியரசு தலைவரை சந்தித்தார். அவர் உட்கட்சி பிரச்சினையை தீர்த்து வைக்க செல்லவில்லை. திமுக ஆட்சியில் சென்னையில் கட்டப்பட்ட பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவரை அழைக்கச் சென்றார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகளும் டெல்லி சென்றனர்.
அவர்கள் மக்கள் பிரச்சினைக்காக செல்லவில்லை. அவர்களது கட்சி பிரச்சினைக்காக சென்றனர். திமுக தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர் என்ற நிலை இருக்கிறது,என்றார். அமைச்சர் சு.முத்துசாமி, திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி, நெசவாளர் அணி செயலாளர் சச்சி தானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT