Last Updated : 08 Sep, 2017 08:05 AM

 

Published : 08 Sep 2017 08:05 AM
Last Updated : 08 Sep 2017 08:05 AM

கோவை சோமனூரில் பயங்கரம்: பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் பலி: படுகாயம் அடைந்த 16 பேருக்கு தீவிர சிகிச்சை

கோவை சோமனூரில் நேற்று மதியம் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான சோமனூரில், கோவை, திருப்பூர் மாவட்ட பேருந்துகள் வந்து செல்வதற்காக அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. தினமும் சுமார் 75 பேருந்துகள் வந்து செல்கின்றன. நேற்று மதியம் சுமார் 1.35 மணியளவில் அங்கு மூன்று பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது சோமனூரிலிருந்து திருப்பூர் செல்லும் நகரப் பேருந்து புறப்படத் தயாரானபோது, எதிர்பாராதவிதமாக பேருந்துகள் நிறுத்தும் இடத்தின் மேல் உள்ள காங்கிரீட் கூரை இடிந்து பேருந்தின் மீது விழுந்தது. சில நொடிகளிலேயே சுமார் 200 அடி தூரத்துக்குமான மொத்த மேற்கூரையும் சீட்டுக்கட்டைப் போல இடிந்து சரிந்தன.

30 ஆம்புலன்ஸ்கள்

இதை சற்றும் எதிர்பாராத பயணிகள் சிலர், அந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களின் கூக்குரல் கேட்டு, அங்கிருந்த மக்களே அவர்களை மீட்க முயற்சித்தனர். தகவலறிந்து வந்த கருமத்தம்பட்டி போலீஸார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், சுகாதாரத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். பொதுமக்களும், போக்குவரத்துக்கழக ஊழியர்களுமே பொக்லைன் இயந்திரங்களை வரவழைத்து இடிபாடுகளை இடித்து உள்ளே சிக்கியவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அதன் பிறகு போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் 30 ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

16 பேர் படுகாயம்

இதில், அரசுப் பேருந்து ஓட்டுநரான மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிவக்குமார் (40), சோமனூர் இச்சிபட்டியைச் சேர்ந்த தரணி (20), கோவை அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (40) ஆகியோரது உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. 65 மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோமனூர் கிட்டாம்பாளையத்தைச் சேர்ந்த துளசி (40) என்பவரும் பலியானார்.

படுகாயமடைந்த ஆனந்தகுமார் (45), விஜயா (40), முரளி (48), ராஜாராம் (38), லீமாரோஸ் (70), நடத்துநர் மோகன்ராஜ் (38), ஓட்டுநர் சண்முகம் (41) ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையிலும், சுப்பாத்தாள் (60), ஆறுச்சாமி (48), சரஸ்வதி (65), ஓட்டுநர் தண்டபாணி (45) ஆகியோர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். எலும்பு முறிவு ஏற்பட்ட அய்யாவு (80), மல்லப்பகவுண்டர் (90), வளர்மதி (44), கமலம் (70), கல்லூரி மாணவி லதா (20) ஆகியோர் மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு என்ன காரணம்?

1997-ல் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணியின்போதே மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு 2012-ம் ஆண்டு பராமரிப்புப் பணிகள் நடந்துள்ளன. 2015-ல் தாய்மார்கள் பாலூட்டும் அறை கட்டப்பட்ட போது, பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் டைல்ஸ் கற்களை மட்டும் வைத்து அழகுபடுத்திவிட்டதாகவும், மேற்கூரைகளை பராமரிப்பதே இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேருந்து நிலையத்தின் நிலை குறித்து ஆட்சியருக்கும், பேரூராட்சிக்கும் ஏற்கெனவே தகவல் கொடுத்தும்கூட யாரும் கண்டு கொள்ளவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்மழையால் காங்கிரீட் மேல்தளம் சிதைந்து நீர்க்கசிவு இருந்துள்ளது. அதை கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

நிர்வாகம் என்ன செய்தது?

விபத்திலிருந்து தப்பிய போக்குவரத்துக்கழக ஊழியர் எஸ். ரமேஷ் கூறும்போது, ‘தினசரி 70-க்கும் மேற்பட்ட பேருந்துகள், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையம் என்பதால் பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தோம். ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே மழையால் மேல்பகுதியில் நீர் தேங்கியிருந்தது. நீர்க்கசிவை கவனித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால்கூட இந்த விபத்தை தடுத்திருக்க முடியும். சக ஊழியரையும், பயணிகளையும் கண்ணெதிரே பறிகொடுத்துள்ளோம்’ என்றார்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x