Published : 29 Apr 2023 06:02 AM
Last Updated : 29 Apr 2023 06:02 AM

வேலூர் | சிறுவர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டம்

வேலூர் காகிதப்பட்டரையில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு 7 சிறுவர்கள் தப்பி சென்றனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் சிறுவர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பினர். இதில், 2 பேர் சிக்கிய நிலையில், மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வேலூர் காகிதபட்டரை பகுதியில் செயல்பட்டு வரும் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில், குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்த 7 சிறுவர்கள் நேற்று முன்தினம் இரவு தப்பிவிட்டனர்.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், சிறுவர் இல்லத்தின் பி தொகுதியில் தங்கியிருந்த 7 பேரும், அங்குள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், கழிப்பறையின் சிமென்ட் ஜன்னலை உடைத்து தப்பியுள்ளனர். இவ்வாறு தப்பியவர்கள் அன்பு செல்வம் (19), கார்த்தி என்ற கருப்பு கார்த்தி (19), சின்னதம்பி(19), நவீன் (18), தங்கபாண்டி(19), ஆதவன்(18), அப்துல் ரகுமான்(19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, சிறுவர் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் தப்பியது தொடர்பாக, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் பாதுகாப்பு இல்ல துணை கண்காணிப்பாளர் செல்வம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில்,3 தனிப்படைகள் அமைத்து, தப்பிச் சென்றவர் களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், தங்கபாண்டி, ஆதவன் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு பெருமுகை அருகே ரோந்துக் காவலர்களால் பிடிபட்டனர். மற்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x