Published : 25 Apr 2023 06:04 AM
Last Updated : 25 Apr 2023 06:04 AM
சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் தொடர்பான ஆய்வு நூல் அறிமுக விழாஇலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நடிகா் சிவாஜி கணேசன் குறித்து, மூத்த ஆய்வாளா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய நூல் ‘சிவாஜி கணேசன்’ கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்நூலின் அறிமுக விழா இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர் ராகேஷ்நட்ராஜ் தொடக்கவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, "சிவாஜி கணேசன் 70 ஆண்டுகளுக்கு முன்பு தனது குழுவினருடன் யாழ்ப்பாணம் வந்து மூளாய் கூட்டுறவு மக்கள் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கும் விதமாக ‘என் தங்கை’ என்கிற நாடகத்தை நடத்தினார்" என்றார்.
நிகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை அறிமுகப்படுத்தி பேசினார். தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.சிறீசற்குணராஜா நுாலை வெளியிட்டார்.
அந்த சிறப்புப் பிரதிகளை சிறப்பு விருந்தினர்களுக்கு ராம்குமாா் வழங்கினார். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, பேராசிரியா் சி.சிவலிங்கராஜா “நீங்கா நினைவில் சிவாஜி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக முளாய் மருத்துவமனை வளாகத்தில் சிவாஜி கணேசன் நட்டு வைத்த மாங்கன்று இன்று 70 வயது மாமரமாக செழித்து வளர்ந்து காய்த்துக் குலுங்குவதை ராம்குமார் வாஞ்சையுடன் பார்த்து, அந்த மரத்தின் அடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது சிவாஜி கணேசனின் அபிமானி சிவா பிள்ளை உடன்இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT