Published : 28 Sep 2017 09:10 AM
Last Updated : 28 Sep 2017 09:10 AM

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை: தேர்தலில் வென்றதும் ஜெ.வை பார்த்தேன் - திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் புதிய தகவல்

‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தேன்’’ என மதுரையில் ஏ.கே. போஸ் எம்எல்ஏ புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை எப்படி பெறப்பட்டது என்பதும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் அவர் ஆலோசனை அடிப்படையில் அரசு சில முக்கிய முடிவுகள் எடுத்ததாக வெளியிடப்பட்ட தகவல்களும் உண்மையா என்பது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ், தான் வெற்றி பெற்றதும் மருத்துவமனை சென்று ஜெயலலிதாவை பார்த்ததாக நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை பார்க்கச் சென்றிருந்தேன்.

என்னுடன் தஞ்சை, அரவக்குறிச்சியில் வெற்றி அதிமுக வேட்பாளர்களும் வந்திருந்தனர். 3 பேரும், வெற்றி சான்றிதழ்களை ஜெயலலிதாயிடம் காட்டி வாழ்த்து பெற வந்ததாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் தெரிவித்தோம்.

அவர் எங்களிடம், ‘நீங்கள் வெற்றி பெற்றதை ஜெயலலிதா டிவியில் பார்த்து மகிழ்ந்தார். இன்னும் 5 நாட்களில் அவர் போயஸ்கார்டனுக்கு வந்துவிடுவார். அதற்கு பிறகு அவரை நேரில் பாருங்கள். இப்போது பார்க்க வேண்டாம்’’ என்றார்.

அதனால், என்னுடன் வந்த செந்தில்பாலாஜி, ரங்கசாமி ஆகியோர் புறப்பட்டு சென்று விட்டனர். நான் எப்படியாவது ஜெயலலிதாவை பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். அப்போது எனக்கு தெரிந்த ஜெயலலிதா வீட்டு போலீஸார் சிலர் அங்கு நின்றிருந்தனர். அவர்களிடம் ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்றேன்.

அவர்கள் தயக்கத்துடன் அவர் சிகிச்சை பெற்ற அறை அருகே அனுமதித்தனர். நான், கண்ணாடி வழியாக ஜெயலலிதா கட்டிலில் சாய்ந்தவாறு படுத்திருந்திருந்தை எட்டி பார்த்தேன். ஆனால், அவர் என்னை பார்த்தாரா, இல்லையா என்பது தெரியவில்லை.

ஜெயலலிதா மணரத்தில் மர்மம் இருப்பதாக சொல்வதெல்லாம் சுத்தப் பொய். அமைச்சர்கள் பார்த்திருக்கலாம், பார்க்காமலும் இருக்கலாம். ஆனால், ‘யாரும் பார்க்கவில்லை’ என அவர்கள் சொல்வது சுத்தப் பொய் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x