Published : 23 Apr 2023 09:02 AM
Last Updated : 23 Apr 2023 09:02 AM
புதுடெல்லி: அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ்-ஐ தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவை சேர்ந்த திருச்செந்தூர் வழக்கறிஞர் பா.ராம்குமார் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
ஜெயலலிதா மறைந்தபோது அமலில் இருந்த கட்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்தும், இபிஎஸ்-ஐ பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லாது என்று அறிவிக்க கோரியும் நாங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டது செல்லாது எனும்போது, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியும் செல்லாது. தவிர, 2022 ஜூன் 23-ம் தேதிக்கு பிறகு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியும் காலாவதியாகிவிட்டது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கே சட்ட அங்கீகாரம் இல்லாதபோது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் கட்சியை கட்டுப்படுத்தாது.
ஜூலை 11 தீர்மானத்தில், அன்றைய தினம் கட்சி உறுப்பினர்களாக உள்ள அனைவரும் பொதுச் செயலாளர் தேர்தலில் வாக்களிக்க தகுதிஉடையவர்கள் என்று அறிவித்துவிட்டு, வாக்காளர் பட்டியலை வெளியிடாமலேயே பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஜனநாயகமற்ற செயல்.
இபிஎஸ் பொதுச் செயலாளராக வேண்டும் என்ற சுயநலனுக்காக, ‘10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும், அதில் 5 ஆண்டுகள் தலைமைக் கழக பணியில் இருந்திருக்க வேண்டும், 10மாவட்டச் செயலாளர்கள் முன்மொழியவும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழியவும் வேண்டும்’ என்று கட்சி விதிகளை இஷ்டம்போல திருத்தியது சட்டவிரோதம்.
பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுவை 2023 மார்ச் 18-ம் தேதி தொடங்கி, மறுநாள் மதியத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை சர்வாதிகார நடைமுறை.
எனவே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளராக இபிஎஸ்-ஐயும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதை செல்லாது என அறிவித்து, அதைரத்து செய்ய வேண்டும். எங்கள்வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரை, ஜெயலலிதா மறைவின்போது அதிமுகவில் என்ன விதிகள்அமலில் இருந்ததோ, அதை தொடர்ந்து கடைபிடிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT