Published : 19 Apr 2023 06:15 AM
Last Updated : 19 Apr 2023 06:15 AM

பதவியில் சலிப்பு ஏற்பட்டால் விலகி விடுவேன் - பள்ளி மாணவி கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

ராமேசுவரம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி. படம்: எல். பாலச்சந்தர்

ராமேசுவரம்: நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது நான் எனது வேலையில் இருந்து விலகிவிடுவேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ராமேசுவரம் அருகே மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய `தேர்வு வீரர்கள்' புத்தகங்களை வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு ஆளுநர் அளித்த பதில்: நான் ஐ.பி.எஸ். பதவியில் இருந்தபோதும் மகிழ்ச்சியாக பணிபுரிந்தேன். தற்போது ஆளுநர் பதவியிலும் மகிழ்ச்சியாகவே பணியாற்றுகிறேன். நாம் எந்த பதவியில் இருந்தாலும் அதனை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். ஒருவேளை நான் வகிக்கும் பதவியில் எனக்கு மகிழ்ச்சியை தராமல், சலிப்பு ஏற்பட்டால் நான் என் வேலையில் இருந்து விலகிவிடுவேன், அதுவரை என்னுடைய பதவியை சிறப்பாகச் செய்வேன்.

மாணவர்கள் மொபைல் போன்களில் நேரத்தைக் கழிப்பதை தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக 9-ம் வகுப்புக்கு மேல் கவனமுடனும், திறன்படவும் உழைக்க வேண்டும். ஒவ்வொரு நேரத்தையையும் பயனுரப் பயன்படுத்த வேண்டும். மாணவ, மாணவியர்கள் மனதை ஒருமுகப்படுத்த தினமும் யோகாசனம் செய்ய வேண்டும்.

நாட்டின் பிரகாசமான மகன்களில் ஒருவரும், உத்வேகம் தரும் தலைவருமான மறைந்த டாக்டர் அப்துல் கலாம், ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர். தன் கனவை நம்பி கடுமையாக உழைத்ததால் ஈடு இணையற்ற சாதனைகளைப் படைத்தார். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்களுடன் உரையாற்றினார்.

பின்னர் ராமேசுவரம் அருகே நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

இன்று காலை 7 மணிக்கு ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் உள்ள தரணி முருகேசனின் ஒருங்கிணைந்த இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் உரையாடுகிறார். காலை 10 மணியளவில் உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

தொடர்ந்து பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாக ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 60 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x