Published : 17 Apr 2023 10:59 AM
Last Updated : 17 Apr 2023 10:59 AM

துபாய் தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: துபாய் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், த/பெ.அப்துல் காதர் (வயது 43) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த குடு (எ) முகமது ரபிக், த/பெ.சலியாகுண்டு (வயது 49) ஆகிய இருவரும் 15.4.2023 அன்று அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x