Published : 15 Apr 2023 04:44 AM
Last Updated : 15 Apr 2023 04:44 AM

அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் கொண்டாட்டம் - ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ உள்ளிட்டோர்.

சென்னை: சட்டமேதை அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று மரியாதை செலுத்தினர்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அம்பேத்கர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்வில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருமாவளவன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் கு.செல்வப்பெருந்தகை, தாயகம் கவி, சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையொட்டி முதல்வர் தனது சமூக வலைதள பக்கங்களில், ‘‘பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிற்போக்குத்தனங்களில் மூழ்கியிருந்த இந்தச் சமூகத்தில் அறிவொளி ஏற்றிட்ட புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் லட்சியங்களை நெஞ்சிலேந்தி, சமத்துவ நாள் உறுதிமொழியேற்று போற்றினேன். சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல். மானுடத்தின் பொருள்" என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்குகீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மரியாதை செலுத்தினார். உடன் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.வைத்தியநாதன், ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, நிர்மல் குமார், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிமுக சார்பில், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, பா.பென்ஜமின், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.வேணுகோபால், கட்சியின் அமைப்புச் செயலாளர் நா.பாலகங்கா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் கரு.நாகராஜன், எஸ்.சி பிரிவு தலைவர் தடாபெரியசாமி உடன் இருந்தனர்.

ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில எஸ்.சிபிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்பேத்கர் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார். உடன் சு.திருநாவுக்கரசர் எம்.பி, எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, எஸ்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றனர். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தியாகராய நகரில் உள்ள இந்தியகம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தில் அம்பேத்கர் படத்துக்கு கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் நா.பெரியசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் வஹிதா நிஜாம்மரியாதை செலுத்தினர்.

அண்ணாசாலை எல்ஐசி அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழுஉறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செய்தார். கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அமமுக துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், அமைப்புச் செயலர் ம.கரிகாலன் மரியாதை செலுத்தினர்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் பொருளாளர் பிரேமலதா, துணைச்செயலாளர் ப.பார்த்தசாரதி உள்ளிட்டோர் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

சைதாப்பேட்டையில் உள்ள எம்சி ராஜா கல்லூரி மாணவர் விடுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தி.கரில் உள்ள தனது இல்லத்தில் வி.கே.சசிகலா அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கர் மணிமண்டபத்தில் புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி கட்சி, மே 17 இயக்கம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்க நிர்வாகிகள் மரியாதை அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x