Published : 15 Apr 2023 04:10 AM
Last Updated : 15 Apr 2023 04:10 AM

ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி - திமுகவை சேர்ந்த 12 பேரின் சொத்து விவரம் வெளியிட்ட அண்ணாமலை

சென்னை கமலாலயத்தில் திமுகவினரின் சொத்து பட்டியலை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அப்போது தனது ரபேல் வாட்ச் பில்லை காட்டினார்.படம்: ம.பிரபு

சென்னை: திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியல் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சில விவரங்களை வீடியோ பதிவாக நேற்று வெளியிட்டார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற இணையதளத்தில் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அதுகுறித்து பத்திரிகையாளர்களிடமும் பேசினார்.

திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து விவரங்களை முதல்கட்டமாக வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி, எ.வ.வேலுவுக்கு ரூ.5,552.39 கோடி, கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதி மாறனுக்கு ரூ.12,450 கோடி, டி.ஆர்.பாலு ரூ.10,841.10 கோடி, கதிர் ஆனந்த் ரூ.579.58 கோடி, கலாநிதி வீராசாமி ரூ.2,923.29 கோடி, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி ரூ.581.20 கோடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி, உதயநிதி ஸ்டாலின் ரூ.2,039 கோடி மற்றும் சபரீசனுக்கு ரூ.902.46 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் திமுகவினர் நடத்தும் பள்ளிகளின் சொத்து மதிப்பு ரூ.3,474.18 கோடி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் சொத்து மதிப்பு ரூ.34,184.71 கோடி எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வகையில், திமுகவினரின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி என்று தெரிவித்த அண்ணாமலை, இதற்கான விளக்கத்தை அடுத்த வாரம் தெரிவிப்பதகாவும் கூறினார்.

மேலும், திமுகவினரின் பினாமி நிலங்கள், உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்துகள், கறுப்பு பணம், கணக்கில் வராத நகை, ஆடம்பரக் கார்கள் மற்றும் வாட்சுகள் போன்ற விவரங்களை அடுத்தகட்டமாக வெளியிடுவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத் தலைவராக எனக்கு மாதத்துக்கு ரூ.8 லட்சம் செலவாகிறது. நண்பர்கள், கட்சியின் உதவியால்தான் இவற்றைச் சமாளிக்க முடிகிறது. காருக்கு டீசல், உதவியாளர்கள் ஊதியம், வீட்டு வாடகைஎன அனைத்தையும் மற்றவர்கள்தான் கொடுக்கிறார்கள். நான் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் `பெல் அண்ட் ரோஸ்' என்ற நிறுவனம், ரபேல் விமானத்தை தயாரித்த பிரெஞ்சு நிறுவனத்துடன் சேர்த்து தயாரித்தது. உலகில் மொத்தமே 500 ரபேல் வாட்ச்-கள்தான் உள்ளன. நான் கட்டியிருப்பது 147-வது வாட்ச். இந்தியாவில் 2 ரபேல் வாட்ச்-கள் மட்டும்தான் விற்றுள்ளன. இதில் ஒன்றை மும்பையைச் சேர்ந்த ஒருவர் வைத்துள்ளார்.

மற்றொன்று கோவையைச் சேர்ந்த ஒரு வாட்ச் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இதை 2021 மார்ச் மாதம் கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் வாங்கினார். அவரிடமிருந்து மே மாதம் 27-ம் தேதி ரூ.3 லட்சத்துக்கு நான் வாங்கினேன். இதற்கான ஆதாரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். நான்நேர்மையான அரசியலை முன்னெடுக்க வந்துள்ளேன்.

நான் வெளியிட்ட பட்டியலில் இருக்கும் அனைத்து சொத்துகளும்,திமுகவினரின் நேரடி குடும்பத் தொடர்பில் இருக்கக் கூடியவர்களின் சொத்துகள். பினாமி மற்றும் உறவினர்களின் பெயரில் இருக்கும் சொத்துகள் இதில் இடம் பெறவில்லை.

புதிதாக திமுகவில் சேர்ந்திருக்கும் சிலரின் கறுப்பு பணமும், பினாமி சொத்துகளுமே ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். அதுகுறித்த விவரங்களை இரண்டாம் கட்டமாக நான் வெளியிடுவேன்.

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை தொடங்கியபோது, அவருக்கு எந்தவித தொழிலும், சொத்தும் கிடையாது. தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,010 கோடி.

முதல்வரின் மருமகன் சபரீசன், லண்டனில் உள்ள குற்ற வழக்குகளில் சிக்கிய நிறுவனங்களின் பங்குதாரராக உள்ளார். உதயநிதி ஸ்டாலினும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இயக்குநராக இருந்து ராஜினாமா செய்த நிறுவனத்துக்கு, தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்தபோது ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டுள்ளார்.

திமுக மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் சொத்து விவரங்களையும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நான் வெளியிடுவேன். ஜூன் முதல் அல்லது 2-வது வாரத்தில் தமிழகம் முழுவதும் ‘என் மண்... என் மக்கள்’ என்ற, ஊழலுக்கு எதிரான எனது நடைபயணம் தொடங்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x