Published : 15 Apr 2023 04:54 AM
Last Updated : 15 Apr 2023 04:54 AM

மலைப்பகுதிகளில் வளர்ச்சியை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த விதிகள் - அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீட்டுவசதித் துறை மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் மற்றும் விதிமீறல் கட்டிடங்கள் பெருகுவதைத் தடுக்கவும், ஒழுங்குபடுத்தவும் நகர ஊரமைப்பு இயக்ககத்தின் தலைமை அலுவலகத்தில் தனி அமலாக்கப் பிரிவு உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் குறிப்பாக செயற்கைக்கோள் படங்கள் மற்றும் புவியியல் தகவல்தொகுப்பு வசதிகளைப் பயன்படுத்தி பிரத்யேக மென்பொருள் தயாரித்து அதன்மூலம் அங்கீகாரமற்ற மற்றும் விதிமீறல் கட்டிடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, முதல்கட்டமாக கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத் தப்படும்.

மாநிலத்தின் திட்டப்பகுதி தற்போது உள்ள 7 சதவீத நிலப்பரப்பில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க 135 இடங்களில் மொத்தம் 23,129.98 சதுர கிமீ நிலப்பரப்பு முழுமைத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு முழுமைத் திட்டங்கள், புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது.

புராதனக் கட்டிடங்கள் அமைந்த இடங்கள், பழங்காலக் கட்டிடங்கள் அமைந்த பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை தொடர் கட்டிடப் பகுதிகளாக அந்தந்த நகருக்கான முழுமைத் திட்டத்தில் சேர்க்கப்படும்.

மலைப்பகுதிகளில் வளர்ச்சியை ஒழுங்குபடுத்த தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு விதிகளை மறு ஆய்வுசெய்து மலைப்பகுதிகளுக்கென ஒருங்கிணைந்த விதிகள் உருவாக்கப்படும். நகர் ஊரமைப்பு இயக்கத்தில் உள்ள வரைபடம் மற்றும் ஆவணங்களைக் கணினிவழி பிரதியெடுத்து பாதுகாக்கப்படும். கூட்டு உள்ளூர் திட்டப்பகுதியாக இதுவரை அறிவிப்பு செய்யப்படாத நகராட்சி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி கூட்டு உள்ளூர்திட்டப்பகுதிகளாக அறிவிக்கப்படும்.

கட்டிட முடிவுச் சான்று விரைந்து வழங்கவும், பிணைய தொகையை முடிவுச்சான்று வழங்கும்போதே திருப்பிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறப் பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில், அணுகுசாலை அகலம் நிர்ணயம் உள்ளிட்ட திருத்தங்கள் கலந்தாய்வர் மூலம் ஆய்வறிக்கை தயாரித்து, துறை செயல்படுத்தும்.

வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீடு என்பது பதிவு, குலுக்கல் என்ற அடிப்படையில் இருந்த நிலையில், அதை மாற்றி முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் 58 தொடக்க கூட்டுறவு சங்கங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப்படும். சென்னை ஆதம்பாக்கம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் 15,796 சதுரஅடி பரப்புள்ள இடத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் பெட்ரோல் பங்க் அமைக்கப்படும்.

சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் போன்ற போக்குவரத்து சேவைகளில் இடையூறு இல்லாத பயணத்தை உறுதிசெய்ய, ஒருங்கிணைந்த க்யூஆர் பயணச்சீட்டு முறை மற்றும் பயண திட்டமிடலுக்கான செயலி ரூ.15 கோடியில் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

டிஜிட்டல் சென்னை திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த நகர்ப்புற தரவு மையம் மற்றும் நகர்ப்புற திட்டப் பணியின் திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை தொகுதி ஆகியவற்றை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.5 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x