Published : 14 Apr 2023 05:31 AM
Last Updated : 14 Apr 2023 05:31 AM

காலநிலை மாற்றம் | உள்ளாட்சிகளில் ரூ.10 கோடியில் பசுமை நிதி - பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையாக உள்ளாட்சி அமைப்புகளில் புதுமைகளை புகுந்த ரூ.10 கோடியில் பசுமை நிதி ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் அத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று பதில் அளித்தார். துறை சார்ந்த கொள்கை விளக்க குறிப்புகள் உள்ளிட்டவற்றை, அனைத்து எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு, மீண்டும் மஞ்சப்பை திட்டப்படி, மஞ்சப்பையில் கொடுத்தார். பின்னர் அவர் அறிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு பல்வேறு பள்ளிகளில் 11 ஆயிரம் சூழல் மன்றங்களை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டை காலநிலை மாற்றத்தை சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக உருவாக்கவும், இளைய தலைமுறையினர் மத்தியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தற்போது உள்ள சூழல் மன்றங்கள், காலநிலை மன்றங்களாக மாற்றி அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் நகர்மயமாதல் பல ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள நகரங்களில் சுற்றுச்சூழல் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், இந்நகரங்களுக்குள் நேர்மறையான போட்டியை ஊக்குவிக்கவும் அந்நகரங்களின் பசுமை குறியீட்டின் அடிப்படையில் நகரங்கள் தர வரிசைப்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.3 கோடியில் செயல்டுத்தப்படும். தர வரிசையில் உயர்குறியீடு பெறும் நகரம் அங்கீகரிக்கப்பட்டு அந்த ஆண்டுக்கான காலநிலை தூதராக அறிவிக்கப்படும்.

காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கேற்ற புதுமைகளை புதுக்துவதற்கும் ரூ.10 கோடியில் 'பசுமை நிதி' உருவாக்கப்படும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறந்தவாழ்வியல் நடைமுறைகளை பின்பற்றவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திறன்மிகு மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கத்தில், மத்திய அரசின் சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறை என்ற கருத்தாக்கத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் 'காலநிலைக்கேற்ற வாழ்வியல் முறை' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும், மேம்படுத்தும் 100 பேருக்கு 'முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாப்பு விருது’, தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக நாட்டு மரங்கள் கொண்ட 1000 குறுங்காடுகள் உருவாக்கப்படும்.

கழிவு உற்பத்தியாளர்கள் மற்றும் பயனர்களுக்கு இடையே கழிவுகளை பரிமாறிக்கொள்வதற்காக இணையவழி பரிமாற்றத் தளம் அமைக்கப்படும். பயன்படுத்தி தூக்கி எறியப்படும் மீன்பிடி வலைகளை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x