Published : 13 Apr 2023 06:32 AM
Last Updated : 13 Apr 2023 06:32 AM

அரசியல் தலையீடுகள், தரமற்ற பணிகளால் நெல்லையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழே நீண்ட நேரம் நிறுத்தப்படும் தனியார் பேருந்துகளால் உருவாகும் போக்குவரத்து நெரிசல் . படங்கள்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் வாகனப் பயணம் சவாலாகி வருகிறது. தொலைநோக்கின்றி நிறைவேற் றப்பட்ட திட்டங்கள், அறிவிப்போடு நிற்கும் பாலப்பணிகள், தரமின்றி அமைக்கப்படும் சாலைகளால் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.

எஸ்.என்.நெடுஞ்சாலை: திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், தென்காசி, கடையம் செல்ல சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையை விட்டால் வேறு வழியில்லை. மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் இச்சாலையை கடந்து புறநகர்ப் பகுதியான பழைய பேட்டையை கடப்பதற்குள் 30 நிமிடங்களுக்கு மேலாகிறது.

இச்சாலை விரிவாக்கப் பணி மிகவும் தரமின்றி மேற்கொள்ளப்பட்டு பாதி பகுதி மேடாகவும், மீதம் பகுதி பள்ளமாகவும் இருக்கிறது. வேகத்தடைகள் சுவர் போல் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையின் இருபுறமும் கடை வாசல்களில் வாகனங்களை நிறுத்துவதால் சாலையை விரிவுபடுத்திய பின்னரும் நெரிசல் நீடிக்கிறது.

கொக்கிரகுளத்திலிருந்து சுவாமி நெல்லையப்பர் நெடு்ஞ் சாலை வழியாக டவுன் செல்லும் சாலையில் சரக்கு ரயிலில் வரும் தானியங்களை புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு கொண்டு செல்வதற்காக லாரிகள் சாலையின் குறுக்காக கடந்து செல்லும்போது போக்குவரத்தில் தேக்கம் ஏற்பட்டு வாகனங்கள் டவுன் ஆர்ச்சை தாண்டி அணி வகுக்கின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியை நகருக்கு வெளியே மாற்றுவதுடன், புரம் பகுதிக்கு வாகனங்கள் செல்ல மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் குறுக்கிடும் அகலம்
குறைந்த பாளையங் கால்வாய் பாலம்.

வண்ணார்பேட்டை: நகரின் நாலாபுறத்திலிருந்தும் வரும் வாகனங்கள் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் சிலை ரவுண்டானாவை கடப்பதற்கு பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. மூச்சு முட்டும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இங்கு நீடிக்கிறது. வரம்பு மீறி இயக்கப்படும் தனியார் பேருந்துகள், பயணிகளை ஏற்றியவுடன் செல்லாமல் பாலத்தின் கீழேயே நிறுத்தி வைத்து, மேல்புறம்அணுகு சாலை வழியாக வரும் வாகனங்களையும் செல்ல விடாமல் சாலையை மறித்தவாறு நிற்கின்றன. போக்குவரத்து போலீஸாரும், அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வது இல்லை.

தெற்கு புறவழிச் சாலை: வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் குறுக்கிடும் பாளையங் கால்வாய் பாலம் மிகவும் குறுகலானது. இங்கும் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இப்பாலத்தை விரிவுபடுத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரயில்வே மேம்பாலம்: கொக்கிரகுளத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு செய்து, மண் பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் தலையீடுகளால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி தி்ட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாளையங் கோட்டை பேருந்து நிலையம் பேருந்துகள் நிற்கக் கூட இடமின்றி கட்டப்பட்டுள்ளதால் தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வெளியே நிற்க வேண்டியுள்ளது. இதனால் ஆம்புல ன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் விரைவாக செல்ல முடியாமல் முட்டுக்கட்டை நிலவுகிறது.

இவ்வாறு மாநகர போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்காமல் இருப்பது, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x