Published : 13 Apr 2023 04:29 AM
Last Updated : 13 Apr 2023 04:29 AM

ஜெயலலிதா ஆன்மாவை தொந்தரவு செய்ய வேண்டாம் - உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் அடிப்படையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தார்.

அதில், ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்யும் வகையில், நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஜெயலலிதா இறந்து பல ஆண்டுகளாகி விட்டது. இன்னமும் இதுபோல வழக்கு தொடர்ந்து ஏன் அவருடைய ஆன்மாவை தொந்தரவு செய்கிறீர்கள் என்றும், அந்த ஆன்மாவை அமைதியாக இருக்க விடுங்கள் என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்தால் ஜெயலலிதா மீது பாசம் வைத்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு எரிச்சலும், மன வேதனையும்தான் ஏற்படும் என்றார்.

மேலும், ஆறுமுகசாமி ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி தனது அறிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்பதும், நிராகரிப்பதும் அரசின் அதிகாரத்துக்குட்பட்டது. அந்த பரிந்துரையை ஏற்க வேண்டுமென அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக வழக்கு தொடர மனுதாரருக்கு என்ன அடிப்படை முகாந்திரம் உள்ளது, என கேள்வி எழுப்பினார்.

அப்போது இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவியாக முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், தமிழக அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, விசாரணை ஆணையசட்டப்படி, ஓர் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது
என்பது மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரமுடியாது, என்றனர். அதைப்
பதிவு செய்து கொண்ட நீதிபதி,விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x