Published : 11 Apr 2023 02:09 PM
Last Updated : 11 Apr 2023 02:09 PM

விளம்பரம் செய்தால், விளையாடினால் சிறை - ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடை சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வது முக்கியமாகிறது. தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன் முக்கிய அம்சங்கள்:

  • தமிழகத்தில் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
  • இதன்படி, ஆன்லைன் மூலம் நடைபெறும் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
  • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு சேவை வழங்கும் நிறுவனங்கள், இனி அந்த சேவையை வழங்க தடை விதிக்கப்படுகிறது.
  • எந்த நிறுவனமும், எந்த வகையிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.
  • இதுபோன்ற விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் விளையாடுவோர் இடையே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகள், பேமென்ட் வங்கிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
  • பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றை விளையாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
  • அதேபோல, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
  • இதுபோன்ற சூதாட்டங்களில் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள், அடுத்தடுத்து தண்டனை பெறும்போது ஓராண்டுக்குக் குறையாமல், 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
  • ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தனி ஆணையத்தை அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தின் தலைவராக, அரசு தலைமைச் செயலருக்கு குறையாத பதவி வகித்து, ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும், காவல் துறை ஐ.ஜி., தகவல் தொழில்நுட்ப வல்லுநர், மனநல ஆலோசகர், ஆன்லைன் விளையாட்டில் அனுபவம் வாய்ந்த ஒருவர் ஆகியோரை உறுப்பினராக நியமிக்க வேண்டும்.

முன்னதாக, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டதைத் தடுக்க கடந்தாண்டு அக்டோபர் மாதம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து, அக்.19-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில், இதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவில் சில விளக்கங்களை ஆளுநர் கேட்டார். அதற்கு உடனடியாக பதில் அளிக்கப்பட்டது. பின்னர், 4 மாதங்கள் கழித்து, அந்த சட்ட மசோதாவை, தமிழக அரசுக்கு சட்டமியற்ற அதிகாரமில்லை என்று கூறி ஆளுநர் திருப்பியனுப்பினார்.

இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக மசோதா, தமிழக சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டன. அந்த மசோதா மற்றும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் என அனைத்தும் தமிழக சட்டத் துறையின் மூலம் ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x