Published : 11 Apr 2023 04:34 AM
Last Updated : 11 Apr 2023 04:34 AM

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்: முழு விவரம்

சென்னை: தமிழக அரசால் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர்ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் உட்பட பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, அதனால் தற்கொலை செய்து கொண்டநிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன.இதையடுத்து, கடந்த அதிமுகஆட்சியின் போது, சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றன. இதையடுத்து, நீதிமன்றம் இச்சட்டத்தை ரத்து செய்ததுடன், புதிய சட்டம்கொண்டுவரலாம் என தெரிவித்தது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம்ஏற்பட்டு, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும், ஆன்லைன் சூதாட்டவிளையாட்டுகளால் தற்கொலை நிகழ்வுகள் தொடர்ந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு இறுதியில், ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யமுன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை பெறப்பட்டதுடன், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறுதரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் பெரும்பான்மையானோர் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ஆதரவு தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ‘தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம்’, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுடன் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பிறகு, அந்த அவசர சட்டமசோதாவுக்கு பதிலாக, அதில்உள்ள ஷரத்துகளில் எந்த மாற்றமும் செய்யாமல், சட்டப்பேரவையில் அக்.19-ம் தேதி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சட்ட மசோதாவில் ஆளுநர் சில விளக்கங்களை கோரினார். 24 மணிநேரத்தில் அதற்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

அதன்பிறகு, ஆளுநரை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து நேரில் விளக்கம் அளித்து,மசோதாவுககு ஒப்புதல் அளிக்குமாறு கோரினார். பல்வேறு கட்சியினரும் இதை வலியுறுத்தி வந்தனர். அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், 131 நாட்கள் கழித்து, ஆளுநர் அந்த மசோதாவை கடந்த மார்ச் 6-ம்தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். மத்திய அரசுடன் தொடர்புடைய இந்த சட்டத்தில் மசோதாநிறைவேற்ற மாநில சட்டப்பேரவைக்கு இருக்கும் அதிகாரம் குறித்து ஆளுநர் அப்போது கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 9-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டு, மீண்டும் அதே மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பட்ஜெட் தாக்கலுக்காக சட்டப்பேரவை கடந்த மார்ச் 20-ம் தேதி மீண்டும் கூடியது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் மசோதாவை முதல்வர் ஸ்டாலின் மார்ச் 23-ம் தேதி தாக்கல்செய்தார். அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் இந்த சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, குடிமைப் பணிதேர்வுக்காக தயாராகும் மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் கடந்த ஏப்.6-ம் தேதி நடந்தது. இதில் பேசியஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காகவே அதை நிறுத்திவைப்பு என்கிறோம்’’ என்றார். ஆளுநர் இவ்வாறு கூறியதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து ஏப்.12-ம் தேதி மாலைதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. பேரவையால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்ககால நிர்ணயம் விதிக்க வேண்டும்என வலியுறுத்தி, பேரவையில் முதல்வர் ஸ்டாலினால் நேற்று தனித் தீர்மானமும் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழலில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று இரவுமானியக் கோரிக்கைகள் மீதான விவாத முடிவில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, ‘‘பேரவையில் இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித் தீர்மானத்தின் நல்விளைவாக, மாலையிலேயே ஆன்லைன்சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற நல்ல செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். இந்த சட்டமானது உடனடியாக இன்றே அரசிதழில் வெளியிடப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x