Published : 27 Sep 2017 08:26 AM
Last Updated : 27 Sep 2017 08:26 AM

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தோள்மூட்டு, ஸ்டெம் செல் சிகிச்சை மையம்: அமைச்சர் தொடங்கிவைத்தார் - இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இலவச சிகிச்சை

சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தோள்மூட்டு மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை மற்றும் விளையாட்டுக் காயங்கள் துறையில் தோள் மூட்டு சிகிச்சை மையம் (Soulder Clinc)மற்றும் குருத்தணு சிகிச்சை (Stem Cell Therapy) மையத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. துறையின் தலைவர் ஜார்ஜ் லியோனார்ட் பொன்ராஜ் விழாவுக்கு தலைமைத் தாங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இந்த சிகிச்சை மையங்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை அரசு பொது மருத்துவமனை முதல்வர் நாராயணபாபு, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ், மருத்துவக் கல்வி இயக்குநர் ஏ.எட்வின் ஜோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த சிகிச்சை மையங்களின் செயல்பாடுகள் குறித்து துறையின் தலைவர் ஜார்ஜ் லியோனார்ட் பொன்ராஜ் கூறியதாவது:

தென்னிந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையில்தான் மூட்டு நுண்துளை மற்றும் விளையாட்டு காயங்கள் துறை உள்ளது. இந்த துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தோள்மூட்டு சிகிச்சை பிரிவில் இளைஞர்களுக்கு ஏற்படக்கூடிய தோள்மூட்டு விலகல், முதிய வயதில் சர்க்கரை நோய் பாதிப்பினால் ஏற்படக்கூடிய தோள்மூட்டு இறுகுதல், தோள்மூட்டு தசை கிழிவு, தோள்மூட்டு வலிக்கு மீயொலி கருவி உதவியுடன் ஊசிமருந்து செலுத்துதல் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சைகள் செய்யப்படும்.

ஸ்டெம் செல் சிகிச்சை மையத்தில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்யாமல், மூட்டு குருத்தெலும்பை வளரச் செய்து மூட்டு தேய்வை தடுக்கலாம். இதற்காக ரூ.10 லட்சம் செலவில் நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்வதற்கு சுமார் 3 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்த மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்படும்.

இவ்வாறு ஜார்ஜ் லியோனார்ட் பொன்ராஜ் தெரிவித்தார்.

7,120 பேர் பயன்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ரூ.35.24 கோடி செலவில் 5,376 பேரும், இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் ரூ.12.39 கோடி செலவில் 1,744 பேரும் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x