Last Updated : 10 Apr, 2023 05:30 AM

 

Published : 10 Apr 2023 05:30 AM
Last Updated : 10 Apr 2023 05:30 AM

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் புலிகள் காப்பகங்கள்: மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டு

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்

புதுடெல்லி: தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள் சிறப்பாக செயல்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டியுள்ளார்.

வனவிலங்கு பாதுகாப்பில் மிகச் சிறந்ததான 'புலிகள் திட்டம்' தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூருவில் 3 நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று தொடங்கியது. இதையொட்டி, மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்த புலிகள் திட்டத்தில் தற்போதைய மத்திய அரசின் சாதனைகள் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வனவிலங்கு பாதுகாப்பை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. புலிகள் காப்பகங்களை விரிவுபடுத்துதல், உள்ளூர் சமூகங்களைபாதுகாப்பு முயற்சிகளில் பங்குதாரர்களாக மாற்றுதல், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற முழுமையான திட்டங்களை உருவாக்கியுள்ளது. புலிகள் காப்பகங்கள் சுற்றுச்சூழலின் முழு மறுமலர்ச்சிக்கு உதவும் வழிமுறை ஆகும். பிரதமர் மோடி கூறியதுபோல் புலிகளை பாதுகாப்பது ஒரு தேர்வு அல்ல, இது ஒரு கட்டாயம்.

இந்தியாவில் புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் பங்கை மத்திய அரசு உணர்கிறதா?

இந்தியாவில் புலிகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில், தமிழகம் உயர்ந்த இடத்தில் உள்ளது. நாட்டின் புலிகள் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் (264) புலிகள் தமிழகத்தில் உள்ளன. புலிகள் காப்பகங்கள் மாநிலத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழ்நாடு ஒரு முனைப்பான புலிகள் பாதுகாப்பு கொள்கையை பின்பற்றி சமூகத்தை உள்ளடக்கிய புலிகள் பாதுகாப்பு உத்தியில் ஒரு முன்னோடியான பரிசோதனையை தொடங்கியது.

தமிழகத்தில் புலிகளின் பாதுகாப்பு, வளர்ச்சி நிலை மீது மத்திய அரசின் பார்வை?

புலிகள் காப்பகங்கள், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் கீழ் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை பெறுவதால், அவை பல்லுயிர் பாதுகாப்பின் சுருக்கமாகும். ஆனால், புலிகள் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் மட்டுமே காப்பகங்களை பார்ப்பது ஒரு குறுகிய பார்வை ஆகும். 350-க்கும் மேற்பட்ட நன்னீர் ஓடைகளும், நதிகளும் புலிகள் காப்பகங்களின் இணைப்பில் உருவாகின்றன. களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதி, அங்கு உற்பத்தியாகும் ஆறுகள், அங்கு வாழும் புலிகள் ஆகியவை நன்கு பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் புலிகள் காப்பகத்தில் இருந்து உருவாகும் தாமிரபரணி நதி இன்றும் வற்றாத நதியாகப் பாய்கிறது.

புலிகளை பாதுகாப்பதால் பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு பலன் என்ன?

புலிகள் காப்பகங்களில் உள்ளூர் சமூகங்களுக்கு சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் துணை நடவடிக்கைகள் வடிவில் ஆயிரக்கணக்கான வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. சவாய் மாதோபூர், ராம்நகர், தலா, தேக்கடி போன்ற பல நகர்ப்புறப் பகுதிகளின் பொருளாதாரம் புலிகள் சுற்றுலாவை சார்ந்துள்ளது. புலிகள் காப்பகங்கள் உள்ளூர் மக்களுக்கு ஆண்டுதோறும் சராசரியாக, 50 லட்சத்துக்கும் அதிகமான வேலை நாட்களை உருவாக்குகின்றன.

தமிழகத்தில் முதுமலை சரணாலயத்தில் புலிகள் காப்பகம் அமைந்தது எப்படி?

முதுமலை வனவிலங்கு சரணாலயம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. எனவே, அந்த புலிகள் காப்பக பகுதியில் இருந்து முதுமலை சரணாலயத்துக்கு புலிகள் வந்ததோடு இங்கு தாவர உண்ணிகள் அதிகம் உள்ளதால் புலிகளின் எண்ணிக்கையும்ஓரளவு அதிகரித்தது. எனவே, தமிழகத்தில் அதிக புலிகள் உள்ள சரணாலயம் என்ற அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகம்,கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. எனவே, எளிதாக வேட்டையாடுவதற் கான வாய்ப்புகள் இருந்தன. முக்கிய பகுதிகளில் வேட்டை தடுப்பு முகாம்கள் அமைத்து, கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈரோட்டில் தமிழக அரசு திட்டமிடும் சரணாலயத்தால் புலிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?

கேரளாவைச் சேர்ந்த யானைகள், முதுமலை புலிகள்காப்பகம் வழியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு செல்வது வழக்கம். சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் காப்பகத்தில் இருந்துஈரோடு வனப்பகுதிகளுக்கு புலிகள் செல்வதால் அங்கு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த புலிகளை பாதுகாக்கும் வகையில் ஈரோடு வனப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

அதனால், புலிகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு, எதிர்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை வனவிலங்கு சரணாலயமும், அதையொட்டி வில்லிபுத்தூர் கிரிசில்ட் அணில் சரணாலயமும் உள்ளன. இந்தசரணாலயங்களின் மேற்கு பகுதி கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகத்தின் எல்லையாக உள்ளது. வில்லிபுத்தூர் மற்றும் மேகமலை சரணாலயங்களுக்கு கேரளாவில் இருந்தும், தெற்கில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் புலிகள் வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேகமலை சரணாலயங்களை இணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2022-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

வைகை ஆறு, இந்த காப்பகத்தில் இருந்து உற்பத்தியாகிறது. ஆனால் கோடையில் தண்ணீர் வருவதில்லை. இங்குள்ள புலிகளை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அடிப் படையில் தாமிரபரணிபோல, வைகை நதியும் எதிர்காலத்தில் வற்றாத நதியாக மாற வாய்ப்புகள் அதிகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x