Published : 09 Apr 2023 04:07 AM
Last Updated : 09 Apr 2023 04:07 AM

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்க அவசியம் இல்லை: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்

சென்னை: பொது இடங்களில் முகக் கவசத்தை கட்டாயமாக்கும் அவசியம் தற்போது இல்லை.தேவைப்படும்போது கட்டாயமாக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கண்ணகி நகரில் உள்ள முதல் தலைமுறை கற்றல் மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமைசுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1,800 மருத்துவமனைகள் உள்ளன. இத்திட்டத்தில் 1,500 சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பிரதமர் காப்பீடு, முதல்வர் காப்பீடு ஆகிய இரு திட்டங்களும் இணைந்து செயல்படுகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல்வர் காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. சோழிங்க நல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளில் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் பல், கண், காது மூக்கு தொண்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மருத்துவர் பற்றாக்குறையை போக்க, 1,021 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்மாத இறுதியில் நடக்கும் தேர்வில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. மற்ற மசோதாக்கள்போல, சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கான மசோதாவையும் ஆளுநர் முடக்கி வைத்துள்ளார். நாடு முழுவதும் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. ஒருவேளை, தொற்று ஏற்பட்டாலும், ஒரு வாரத்தில் குணமடைந்துவிடலாம். எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 1-ம் தேதி முதல் மருத்துவமனைகளில் முகக் கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பொது இடங்களில் முகக் கவசத்தை கட்டாயமாக்கும் அவசியம் தற்போது இல்லை. தேவைப்படும்போது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x