Published : 26 Sep 2017 12:31 PM
Last Updated : 26 Sep 2017 12:31 PM

முன்விரோதம் காரணமாக மதுரை பல்கலை., பேராசிரியைக்கு கத்திக்குத்து

முன்விரோதம் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இருக்கிறது காமராஜர் பல்கலைக்கழகம். இங்கு பத்திரிகை மற்றும் தகவல் தொடர்புத்துறையில் பேராசிரியையாக பணி புரிகிறார் ஜெனிஃபா (42). இதே துறையில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார் ஜோதி முருகன். இவர் இதே பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பயின்றவர். இவர் சரியாக பணிக்கு வருவதில்லை என ஜெனிஃபா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் இருந்துள்ளது.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஜெனிஃபா கல்லூரியில் பேராசிரியர்களுக்கான அறையில் இருந்தபோது ஜோதி முருகன் வந்துள்ளார். இருவருக்கும் இடையே வருகைப்பதிவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜோதி முருகன் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் ஜெனிஃபாவை குத்தியுள்ளார். ஜெனிஃபாவை மீட்ட சக ஊழியர்கள், அவரை நாகமலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்குப் பின் அவர் தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்ட ஜோதி முருகனை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x