Published : 07 Apr 2023 04:37 AM
Last Updated : 07 Apr 2023 04:37 AM

வன விலங்குகளால் பயிர்கள் சேதமாவதை தடுக்க ஒரு மாதத்தில் அரசுக்கு பரிந்துரை: வனத்துறைக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை: வன விலங்குகளால் பயிர்கள் சேதமாவதைத் தடுக்க குழு அமைத்து ஒரு மாதத்தில் அரசுக்குப் பரிந்துரை வழங்க வேண்டும் என்று வேளாண்மை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

வன விலங்குகளால் பயிர்களுக்கு இழப்பு ஏற்படும் நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வேளாண்மை – உழவர் நலத்துறை, வனத்துறை அலுவலர்களுடன் விரிவாகக் கலந்தாலோசித்த பிறகு, தலைமைச் செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாவது:

2023-24 ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து, அதற்கான தீர்வை அரசுக்குப் பரிந்துரை செய்வதற்காக, கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையில் தனிக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

பயிர்களைப் பாதிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை, வனவிலங்குகளால் பயிர் பாதிப்பு, விவசாயிகளின் புகார்கள், பயிர் சாகுபடி பரப்பு குறைவு மற்றும் மாற்றங்கள் குறித்த புள்ளி விவரங்களை ஆண்டு வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை உடனடியாக சேகரித்து இக்குழுவுக்கு அளிக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக பெறப்படும் புள்ளி விவரங்களை, வனத்துறையால் வழங்கப்பட்ட இழப்பீட்டுடன் ஒப்பிட்டு, வனவிலங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணத்தை ஆராய வேண்டும். இக்குழு, உடனடியாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு நேரில் சென்று, வனவிலங்குகள் பாதிப்புக்கு அம்மாநிலங்களால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பின்னர், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை இக்குழு அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இப்பணிகள் அனைத்தையும் ஒரு மாத காலத்துக்குள் முடித்து, உரிய பரிந்துரையுடன் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x