Published : 06 Apr 2023 07:58 PM
Last Updated : 06 Apr 2023 07:58 PM

12 மீனவர்கள், 109 படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 5-4-2023 அன்று தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 1-4-2023 அன்று 12 மீனவர்களுடன் (தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள், புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள்) IND-PY-PK-MM-969 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும், 5-4-2023 அன்று அதிகாலை 1 மணியளவில் கிழக்குக் கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் 4 மீனவர்களின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான மீனவர்களுக்குச் சொந்தமான 7 செல்போன்கள் மற்றும் மீன்களை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர், தமிழ்நாட்டைச் சார்ந்த மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று அடிக்கடி தாக்குதல் நடத்துவது மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திடும் இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய போக்கினை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று கட்டுப்படுத்திடவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ள முதல்வர், இலங்கை அரசின் வசமுள்ள 12 மீனவர்களையும், 109 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டுமென்று தனது கடிதத்தின் மூலம் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x