Published : 05 Apr 2023 04:44 AM
Last Updated : 05 Apr 2023 04:44 AM

தமிழ்நாட்டில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக் காலம் தொடக்கம் - திமுக தேர்தல் அறிக்கைப்படி மீனவர்களுக்கான நிவாரணம் உயருமா?

பாம்பன் தூக்குப் பாலத்தைக் கடந்து செல்லும் விசைப்படகுகள்.

ராமேசுவரம்: தமிழ்நாட்டில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில் இக்கால கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும். தடைக்காலத்தில் தமிழ்நாட்டில் சுமார் 15,000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நங்கூரமிடப்பட்டிருக்கும். மீனவர்கள் தங்கள் படகுகளைச் சீரமைக்க இந்தத் தடைக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்வர்.

இதுகுறித்து மீனவளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ், தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில் கொண்டும் மீன்வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலான 2 மாத காலங்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை உபயோகப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி தடைக் காலத்தில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்றனர்.

மீன்பிடி தடைக் காலத்தின்போது முற்றிலுமாக தொழிலின்றி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5,000 வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படுகிறது. மீன்பிடிக் குறைவு காலத்தில் ரூ.5,000 என வழங்கி வந்த சிறப்பு நிவாரணத் தொகையை கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கி வருகிறது.

அதேநேரத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் மீன்பிடித் தடைக் காலத்தில் சிறப்பு நிவாரணமாக ரூ.8,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டே உயர்வுடன் கூடிய சிறப்பு நிவாரணம் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டு உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டாவது மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8000-மாக வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x