Published : 04 Apr 2023 05:35 AM
Last Updated : 04 Apr 2023 05:35 AM

கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் கைது - மகளிர் ஆணையத்தில் கல்லூரி நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கம்

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். அவரை ஏப்.13 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குபேராசிரியர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் ஹரி பத்மன்,உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், நாத்ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள், கல்லூரி வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ‘2015-முதல் 2019-ம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் சென்னைஅடையாறு அனைத்து மகளிர்காவல் நிலையத்தில், பேராசிரியர்ஹரிபத்மன் மீது, பாலியல் அத்துமீறல் குறித்து பரபரப்பு புகார் மனுஒன்றை அளித்தார். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஹரிபத் மன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இதற்கிடையே கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த 30-ம் தேதிமாணவிகளுடன் சென்ற ஹரிபத்மன்தலைமறைவானார். அவரைகைது செய்ய தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்சின்ஹா தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை மாதவரத்தில் பெண் தோழி ஒருவரது வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மனை தனிப்படை போலீஸார் நேற்றுஅதிகாலை கைது செய்தனர். சைபர்க்ரைம் போலீஸார் உதவியுடன் செல்போன் சிக்னலை அடிப்படையாகவைத்து ஹரிபத்மனை போலீஸார்சுற்றி வளைத்துள்ளனர். பின்னர், அவரை எம்ஜிஆர் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் தன் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மாணவிகள் அனைவரிடமும் சகஜமாகத்தான் பழகினேன். எல்லை மீறவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், ஹரிபத்மனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவரைசைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று மாலை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை ஏப்.13-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில்அடைக்க மாஜிஸ்திரேட் சுப்ரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை புழல் சிறையிலடைக்க பலத்த பாதுகாப்புடன் போலீஸார் நேற்றிரவு அழைத்துச் சென்றனர்.

ஹரிபத்மனை கைது செய்த உடனே அவரது செல்போனை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனில் என்னென்ன தகவல்கள் உள்ளன, மாணவிகளுக்கு குறுந்தகவல், புகைப்படங்களை அனுப்பி உள்ளாரா எனவும், ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதா எனவும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பறிமுதல் செய்யப் பட்ட செல்போனை சைபர் ஆய்வ கத்துக்கு அனுப்பவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஆணையத்தின் மாநில தலைவி குமாரி விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் 4 பேர் மீது கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், நடவடிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இந்தச் சூழலில், மாநில மகளிர்ஆணையத்தின் தலைவி குமாரி நேற்று இரவு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் வெ.இறையன்பை சந்தித்து, கலாஷேத்ரா விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x