Published : 03 Apr 2023 11:30 AM
Last Updated : 03 Apr 2023 11:30 AM

தமிழகத்தை தன் குப்பைத் தொட்டியாக பயன்படுத்தும் கேரளா; முதல்வர் ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்?- நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தை தன் குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளாவை கண்டிக்காதது ஏன்? என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில், தென்காசி மாவட்டம் கரும்பனூரில் கணினிகளின் உதிரி பாகங்கள், செல்போன்கள், பயன்படுத்திய பாட்டரிகள், வாகன உதிரி பாகங்கள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திறந்த வெளியில் கொளுத்தப்பட்டன.

இதனால் கரும்பனூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் உருவாகியுள்ளது.
அதிர்ச்சியளிக்கிறது. மேற்கண்ட கழிவுகள் அனைத்தும் கேரளாவிலிந்து தமிழக எல்லை கிராமங்களுக்கு கொண் டு வரப்பட்டு எரிக்கப்படுவது
தொடர் கதையாகி வருகிறது.

கழிவு மேலாண்மையில் கேரளா முதலிடம் வகிப்பதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயைம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா என்றும், கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளை செய்துள்ளது என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்றும் பெருமையாக மார்தட்டி கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

ஆனால் மருத்துவ கழிவுகள், மின்னனு கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் லாரிகளில் எடுத்து சென்று அண்டை மாநிலமான நம் தமிழகத்தின் தென்காசி மாவட்டம் கரும்பனூரில் எரித்து தமிழர்களின் உயிருக்கு உலை வைக்கிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.

கடந்த பல மாதங்களாக, கேரளாவிலிருந்து லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் மின்னணு கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை நீர்நிலைகளில் கரைப்பது அல்லது எரிப்பது என தமிழகத்தை தன் குப்பைத் தொட்டியாக கேரள அரசு கருதி வருவது தொடர் கதையாகி விட்ட நிலையில், இது குறித்து கடந்த மாதம் நாம் கடும் கண்டனத்தை பதிவு செய்ததையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது.

மேலும், கடந்த மாதம் நீதிமன்றத்தில், தமிழக சுகாதார துறை செயலாளர் செந்தில் குமார், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும், இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் கரும்பனூரில் மின்னணு கழிவுகள் எரிக்கப்பட்டு மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது. மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளில் உள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது தான் இந்த அவல நிலைக்கு காரணம்.

காவல்துறை, போக்குவரத்து துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டே மக்களின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். உள்ளாட்சித் துறை, காவல்துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமே இந்த முறைகேட்டில், சுகாதார சீர்கேட்டில், சுற்றுப்புற சூழலின் அழிவில் பங்கு பெற்று கொண்டிருக்கிறது.

லஞ்ச, ஊழலே இந்த சீரழிவுக்கு காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ? நீதிமன்றத்தில் தமிழக சுகாதார துறை செயலாளர் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? இந்த கொடுமைக்கு பொறுப்பேற்க போவது யார்? கரும்பனூரில் நடைபெற்ற இந்த நாசகார வேலையை தடுக்க முடியாத அனைத்து அரசு அதிகாரிகளும் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இனி மின்னணு மற்றும் மருத்துவ கழிவுகள் கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்குள் வருவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

சமீபத்தில் கேரளா சென்றிருந்த தமிழக முதல்வர், கேரள முதல்வரிடம் தமிழர்கள் பாதிக்கும் இந்த விவகாரம் குறித்து தன் கண்டனத்தை தெரிவித்தாரா? இல்லையெனில், தமிழகத்தை தன் குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளாவை கண்டிக்காதது ஏன்? என்பதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விளக்க வேண்டும்" என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x