Published : 01 Apr 2023 05:50 AM
Last Updated : 01 Apr 2023 05:50 AM

கம்பி அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரத்தை நிறுத்த மின் மாற்றிகளில் சென்சார் மீட்டர் பொருத்தம்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: வழித்தடங்களில் ஏதேனும் பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தும் வகையில், மின்மாற்றிகளில் சென்சார் கருவியுடன் மீட்டர்பொருத்தப்படுகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: கோ.அய்யப்பன் (திமுக): கடலூர் தொகுதியில் சிறு தொழிற்சாலைகூட இல்லை. ஏற்கெனவேகடலூரில் இருந்த தொழிற்சாலைகள், தொகுதி பிரிக்கப்பட்டபோது குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு சென்றுவிட்டதால், புதிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: கடலூர் தொகுதியை பொறுத்தவரை சிறு தொழிற்சாலை அல்ல, பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமே வர வாய்ப்புள்ளது. ரூ.78 ஆயிரம் கோடி முத லீட்டில் அந்த தொழிற்சாலையை கொண்டு வரும் முயற்சியில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் ஆர்வம் காட்டிவருகிறார். அதற்கான முயற்சிகளை அரசு மேற் கொண்டுள்ளது.

செல்லூர் ராஜூ (அதிமுக): மதுரையில் எந்த தொழிலும் இல்லை.மெட்ரோ ரயில் பூர்வாங்க பணி நடைபெறும் நிலையில், ஒரு தொழிற்சாலைகூட இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? விரைவில் மதுரைக்கு தொழிற்சாலையை கொண்டுவர வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க முதல்வர் ஆர்வமாக இருப்பதால், மதுரைக்கு ரூ.600கோடியில் டைடல் பார்க் அறிவித்துள்ளார். அதேபோல, சிப்காட்தொழிற்பேட்டை அறிவிக்கப்பட் டுள்ளது.

தொழில் வழித்தடத்தை மேம்படுத்தி, தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் வரவேண்டும். சென்னை போன்ற நகரங்களில் நெருக்கடி இருப்பதால், மற்ற நகரங்களில் சமச்சீரான வளர்ச்சி வரவேண்டும் என்பதற்காக அறிவித்துள்ளார். எனவேதான், இப்போது வந்துள்ளமுதலீடுகள் தென் மாவட்டங்களுக்கே வந்துள்ளது. மதுரையும் அதில் முக்கிய பங்கு பெறும்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மின் கம்பங்கள், கம்பிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. வெளிநாடுகளில் கம்பம், கம்பி இல்லை. அதேபோல் புதைவடம் அமைக்கும் திட்டம் உள்ளதா?

அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழக மின்வாரியத்தில் முதல்முறையாக, மின்மாற்றிகளில் மீட்டர் பொருத்துவதற்கான அனுமதியை முதல்வர் வழங்கியுள்ளார்.

வழித்தடங்களில் ஏதேனும் பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில், உடனடியாக மின் விநியோகம் துண்டிக்கப்படும் சென்சார் வசதி அதில்உள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அமைக்கப்படும் இந்த மீட்டருக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணி நடைபெறும். இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x