வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முதல் இந்தூர் கோயில் விபத்து வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 30, 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முதல் இந்தூர் கோயில் விபத்து வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 30, 2023
Updated on
3 min read

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், “வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும்” என்று அவர் அறிவித்தார்.

தூய்மைக் காவலர்களுக்கு மாத மதிப்பூதியம் உயர்வு: 66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார். ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1500 கோடி ஒதுக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

இதனிடையே, 9 மாநகராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளில் ரூ.420 கோடியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

10,000 புதிய சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 கோடி சுழல் நிதி: ஊரகப் பகுதிகளில் 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.15 கோடி சுழல் நிதி வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ரூ.145 கோடியில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி 45,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுத்த தியேட்டர் - போலீஸ் நடவடிக்கை: சென்னையில் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களை ரோகிணி தியேட்டருக்குள் முதலில் அனுமதிக்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள திரையரங்கு நிர்வாகம், 'பத்து தல' படம் யு\ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்" என்று விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டுள்ள காவல் துறையினர், திரையரங்க ஊழியர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“மக்களவைத் தேர்தலுக்கும் பாஜக கூட்டணி” - இபிஎஸ்: "பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஏப்.8-ல் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்: சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த ரயில் சேவையை வரும் ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு: “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல. இது நாட்டை காப்பதற்கான போராட்டம். இது மக்களுக்கும் பாஜகவுக்குமான நேரடி போராட்டம்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ம.பி - இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு விபத்து: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள கோயில் படிக்கட்டு கிணற்றின் கூரை சரிந்து விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டோர் மீட்புப் படையினர் மீட்டனர். இந்தூரில் உள்ள பெலாஷ்வர் மகாதேவ் கோயிலுள்ள பழமையான பாவ்டி என்ற கிணற்றின் கூரை சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி விவகாரம்: ஜனநாயகத்தை நம்புவதாக ஜெர்மனி கருத்து: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித் துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்தை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்திற்கும் ரிச்சர்ட் வாக்கருக்கும் நன்றி. இந்தியாவில் ராகுல் காந்தி வழக்கின் மூலம் ஜனநாயகம் எப்படி சமரசம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனித்துள்ளீர்கள். அதற்காக நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அந்நிய சக்திகளை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்திய நீதித் துறையில் எந்த அந்நிய சக்தியும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்தியா இனி ஒருபோதும் அந்நிய ஆதிக்கத்தை அனுமதிக்காது. ஏனெனில் நமது பிரதமர் நரேந்திர மோடி" என்று பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவில் உளவு பார்த்ததாக அமெரிக்க பத்திரிகையாளர் கைது: உளவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பனிப்போர் காலத்திற்குப் பின்னர் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் ரஷ்யாவால் உளவுக் குற்றத்திற்காக கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in