Published : 30 Mar 2023 01:07 PM
Last Updated : 30 Mar 2023 01:07 PM
கொல்கத்தா: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திற்கு உரிய நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுப்பதாகவும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியும் விடுவிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து கொல்கத்தாவில் இரண்டு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று ஆதரவாளர்கள் மத்தியில் அமர்ந்தவாறு பாடல்களைப் பாடி போராடி வருகிறார்.
முன்னதாக, நேற்றைய போராட்டத்தின்போது பேசிய மம்தா பானர்ஜி, ''வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். ஆட்சிக்கட்டிலில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல. இது நாட்டை காப்பதற்கான போராட்டம். இது மக்களுக்கும் பாஜகவுக்குமான நேரடி போராட்டம்.
பாஜகவை நாட்டின் எதிரி என நான் கூற மாட்டேன். அதேநேரத்தில் அக்கட்சி மகாபாரதத்தில் வரும் துட்சாதணன் போன்றது. எனவே, அந்த துட்சாதணனை அப்புறப்படுத்திவிட்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும். அந்த கட்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்ப திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எல்லோரையும் சிறைக்கு அனுப்பிவிட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய யாரும் இல்லாத நிலை உருவாகும். இதையே பாஜக விரும்புகிறது.
இதற்காகவே, அனைத்து தலைவர்களையும் அது ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டி வருகிறது. அகிலேஷ் யாதவ், லாலு யாதவ், உத்தவ் தாக்கரே, அர்விந்த் கேஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி, முக. ஸ்டாலின், கே. சந்திரசேகர ராவ் என ஒவ்வொருவரையும் அது திருடர்கள் என முத்திரை குத்துகிறது. பாஜக மட்டுமே துறவியைப் போன்றது போல வேடம் போடுகிறது என தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும்; மக்களோடு மட்டுமே கூட்டணி என்றும் அறிவித்தார் மம்தா பானர்ஜி. இந்நிலையில், தற்போது அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
இந்த மாதத்தில் அவர் மூன்று முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 17 ஆம் தேதி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும், கடந்த 23 ஆம் தேதி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும், கடந்த 24 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி. குமாரசாமியையும் சந்தித்து மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, அவர் தனது வியூகத்தை மாற்றிக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT