

1 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை: முதல்வர் விளக்கம்: “மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயன்பெறுவர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் மேலும் விளக்கம் அளித்த அவர், “மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிப் பள்ளியின் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு பரிசுத் திட்டம்: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இதில் கல்வித் துறைக்கு மட்டும் 27 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களில் நூற்றுக்கு நூறு (சென்டம்) மதிப்பெண் வாங்கினால் ரூ.10,000 பரிசு உள்ளிட்ட புதிய திட்டங்களை அவர் வெளியிட்டார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.334 கோடி நிதி பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ.148 கோடி செலுத்தப்படுகிறது.
சென்னையின் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் விசாரணைக் கைதிகள் சித்ரவதை - அதிகாரி மீது நடவடிக்கை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் காவல் துறையின் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியது உள்ளிட்ட சித்ரவதை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை மீதான நடவடிக்கையாக, ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் பல்வீர் சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை. மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவர். பல்வீர் சிங் போன்ற மனநிலை கொண்டவர்கள் காவல் துறை உயர்பதவிகளில் இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. உச்ச நீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது உடனடியாக வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை: இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. இது குறித்து அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். அதற்கு பதில் அளித்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "குரூப் 4 நில அளவர் தேர்வு முறைகேடு என்ற புகார் எழுந்தவுடனேயே அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் பெற்ற பின்னர் அது பற்றி பேரவையில் தெரிவிக்கப்படும். குழப்பங்கள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்தநிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கறுப்புச் சட்டையுடன் வந்த காங். எம்எல்ஏ.க்கள்: ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்து திங்கள்கிழமை காலை தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கறுப்புச் சட்டை அணிந்துவந்தனர். மேலும், ராகுல் காந்தியை ஆதரித்து பதாகைகளையும் கொண்டுவந்தனர். சட்டப்பேரவைக்கு சென்ற காங்கிரஸ் எம் எல் ஏக்கள் பதாகைகளை உள்ளே எடுத்துச் செல்ல முயன்றனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவைக்குள் பதாகைகளுக்கு அனுமதியில்லை என்று மறுத்தார். இதனையடுத்து அவர்கள் பதாகைகளை வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்றனர்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்: எதிர்க்கட்சிகள் கறுப்புச் சட்டை பேரணி: அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும், ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு கண்டனம் உள்ளிட்டவற்றை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து திங்கள்கிழமை டெல்லியில் பேரணி மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற வளாகம் தொடங்கி விஜய் சவுக் பகுதி வரை இந்தப் பேரணி நடந்தது. காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் தலைமையில் பேரணி நடந்தது. முன்னதாக இவர்களுடன் காங்கிரஸ், தோழமைக் கட்சிகள் எம்.பி.க்கள் இணைந்து நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்னால் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சத்தியமே வெல்லும், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பிரம்மாண்ட பேனர்களை ஏந்தியிருந்தனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து விஜய் சவுக் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
எதிர்க்கட்சி முகாமில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல் முறையாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மேலும், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிராக நடந்த கறுப்பு உடைப் போரட்டத்திலும் அக்கட்சி எம்பிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் 10,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 134 நாட்களுக்குப் பின்னர் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,000- ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கஜகஸ்தான், ஜெர்மன் கிராண்ட் மாஸ்டர்கள் விலகல்: சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு சார்பில் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வரும் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் சதுரங்க தொடரின் டெல்லி போட்டிகளில் இருந்து கஜகஸ்தானின் ஜன்சயா அப்துல்மாலிக் மற்றும் ஜெர்மனின் எலிசபத் ஆகியோர் விலகியுள்ளனர். இவர்கள் இருவரும் சதுரங்க கிராண்ட் மாஸ்டர்கள் ஆவர். தொடரின் ஏற்பாடுகள் மோசம் எனக் கூறி விலகி உள்ளனர்.
ரஷ்ய அதிபர் புதின் பரபரப்பு பேச்சு: பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளது உலக நாடுகளிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த நடவடிக்கை அணு ஆயுதப் பரவல் தடைக்கான வாக்குறுதிகளை மீறும் வகையில் இருக்காது என்று புதின் கூறியிருக்கிறார். இந்த முடிவின் மூலம் உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவரும் நேட்டோ படைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கையையும் புதின் வழங்கி இருக்கிறார்.
“2 வாரங்களுக்குக் கூட வேலை வழங்க இயலாது”: "பாஜக ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு 2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதியை வெறும் ரூ.60 ஆயிரம் கோடியாக சுருக்கிக் குறைத்து விட்டது. இதில் கடந்த ஆண்டுகளில் வேலை செய்த தொழிலாளர்களின் ஊதியப் பாக்கிக்காக ரூ.17 ஆயிரம் கோடி வழங்கி விட்டால், மீதியுள்ள ரூபாய் 43 ஆயிரம் கோடியை வைத்து இரு வாரங்களுக்கு கூட வேலை வழங்க இயலாது" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.