

டெல்லி: சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு சார்பில் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வரும் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் சதுரங்க தொடரின் டெல்லி (இந்தியா) போட்டிகளில் இருந்து கஜகஸ்தானின் ஜன்சயா அப்துல்மாலிக் மற்றும் ஜெர்மனின் எலிசபத் ஆகியோர் விலகியுள்ளனர். இவர்கள் இருவரும் சதுரங்க கிராண்ட் மாஸ்டர்கள் ஆவர். தொடரின் ஏற்பாடுகள் மோசம் எனக் கூறி விலகி உள்ளனர்.
மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கஜகஸ்தான் மற்றும் கடந்த பிப்ரவரியில் ஜெர்மனி நாட்டிலும் இந்தத் தொடரின் முதல் இரண்டு கட்ட போட்டிகள் நடைபெற்றன. தொடரின் மூன்றாவது கட்ட போட்டி இந்திய தலைநகர் புதுடெல்லியில் மார்ச் 24 முதல் ஏப்ரல் 6 வரை நடத்த திட்டமிடப்பட்டது. அடுத்தகட்ட போட்டிகள் போலாந்து நாட்டில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரின் டெல்லி போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மோசம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு வீராங்கனைகள் கடிதம் எழுதி உள்ளனர். அதில் தொடரை ஒத்தி வைக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் தகவல். இருந்தும் சர்வதேச கூட்டமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், உள்ளூர் ஏற்பாட்டாளர்களின் செயல்பாட்டுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளது. மொத்தம் 12 பேர் இதில் பங்கேற்று விளையாட இருந்தனர். ஆனால், இருவர் விலகி உள்ள காரணத்தால் பத்து பேர் மட்டுமே தற்போது விளையாடுகின்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்க வந்த ஜன்சயா அப்துல்மாலிக் உட்பட சிலரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தங்கும் விடுதியை அணுகியபோது அறைகள் தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை ஜெர்மன் செஸ் கூட்டமைப்பும் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் வீராங்கனைகள் நள்ளிரவில் வாடகை வாகனத்தில் செல்ல இருந்த சூழல் குறித்தும் அந்த நாட்டின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தொடர் திட்டமிட்டபடி தொடங்குவது தாமதம் ஏற்பட்டது. இருந்தும் தற்போது தொடர் தொடங்கியுள்ள நிலையில் இதில் இந்தியாவை சேர்ந்த மூன்று வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
“போட்டிக்கான தயாரிப்பு போதுமானதாக இல்லை. அனைத்து ஏற்பாடுகளும் மோசம். அதனால் நான் விலகுகிறேன். நான் 1.30 மணி அளவில் விமான நிலையம் வந்திருந்தேன். ஆனால், அங்கு என்னை அழைத்து செல்ல யாரும் இல்லை. நான் எனக்கு வந்த மெயிலில் சொன்ன அனைத்தையும் செய்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட தங்கும் விடுதியும் சிறப்பானதாக இல்லை. காற்று மாசு அங்கு அதிகம் இருந்ததை போல இருந்தது.
இந்தியாவை நான் நேசிக்கிறேன். கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் நடத்தப்பட்டது. ஆனால், இந்த முறை எனது பயணம் இனிதானதாக அமையவில்லை. அதனால் இரண்டு வார காலம் இங்கு தங்கி என்னால் விளையாட முடியாது. மகளிர் சதுரங்க வீராங்கனைகளும் நல்ல சூழலில் விளையாட தகுதி கொண்டவர்கள். நான் போராட்ட குணம் கொண்டவள் என்பதை அனைவரும் அறிவர். எந்தவித காரணமும் இன்றி நான் போட்டியிலிருந்து விலக மாட்டேன்” என ஜன்சயா அப்துல்மாலிக் தெரிவித்துள்ளார்.