Published : 27 Mar 2023 03:08 PM
Last Updated : 27 Mar 2023 03:08 PM

பிளஸ் 2 பாடங்களில் சென்டம் எடுத்தால் ரூ.10,000 - சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-ல் கல்விக்கு 27 அறிவிப்புகள்

சென்னை: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களில் நூற்றுக்கு நூறு (சென்டம்) மதிப்பெண் வாங்கினால் ரூ.10,000 பரிசு உள்ளிட்ட 27 அறிவிப்புகளுடன் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச் 27) தாக்கல் செய்தார். இதில் கல்வித் துறைக்கு மட்டும் 27 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:

> அனைத்து சென்னை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதற்கட்டமாக, 2023-2024-ம் கல்வியாண்டில் முன்னுரிமையின் அடிப்படையில் மதிப்பீட்டில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும்.

> சென்னைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவிக்கவும், பள்ளியின் அனைத்து பகுதிகளையும் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக முதற்கட்டமாக, வரும் கல்வியாண்டில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.35 லட்சம் செலவில் 70 Public Address System அமைத்து தரப்படும்.

ஆலோசகர் நியமனம்: வளர் இளம் பருவத்தில் (Adolescent Stage) மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலமே, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். எனவே, பிரச்சினைகளுக்கான தீர்வு தேவைப்படும் பள்ளிகளில், மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் (Counsellors) ஒரு கல்வியாண்டிற்கு ரூ.30 லட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.

> பழுது ஏற்பட்டிருக்கும் பள்ளிக் கட்டடங்களின் மேற்தளங்களை முன்னுரிமையின் அடிப்படையில், Epoxy Water Proofing என்ற தொழில்நுட்பத்தின் மூலம், மறுசீரமைப்பது (Retrofitting of roofs) மற்றும் பள்ளிக் கட்டிடங்களின் அனைத்து விதமான பராமரிப்பு பணிகளுக்காக 2023-2024 கல்வியாண்டில் ரூ.45 கோடி ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சென்னைப் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ஸ்ருதி பெட்டி (Manual), மின்கலன்களால் இயக்கப்படும் ஸ்ருதி பெட்டி (Electronic), ஆர்மோனியம், தாளம் மற்றும் மராக்கஸ் குச்சிகள் Maracas போன்ற இசைக்கருவிகள் ஒரு பள்ளிக்கு ரூ.25,000/- வீதம் 20 பள்ளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

> அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி ரூ.27.17 லட்சம் மதிப்பீட்டில் அமைத்து தரப்படும்.

மாதிரி ஐக்கிய நாடு (MUN) குழு: சென்னை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே கற்றல், கற்பித்தல் செயல்முறைகள் மட்டுமின்றி நமது நாட்டின் நாடாளுமன்ற நடைமுறைகளை அறிவதோடு, பிற நாடுகளின் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், தீர்வுகளைக் கண்டறியவும், பன்னாட்டு கலாச்சாரங்கள், கல்விமுறை, சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றி நமது மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடு (MUN) குழு அமைக்கப்படும்.

> மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் (Remedial Class) பங்கேற்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-2024-ம் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் தேர்வு முடியும் (ஏப்ரல் மாதம்) வரை மாலையில் சிறு தீனி (அவித்த சுண்டல் அல்லது பயிறு வகைகள்) ரூ.100 லட்சம் செலவில் வழங்கப்படும்.

> ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் காலை இறைவணக்கக் கூட்டத்தை ஆங்கிலத்தில் நிகழ்த்த அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பினை வழங்கி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் புலமையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தலைமை பண்பையும் உயர்த்த வழிவகை செய்யப்படும். மேலும், ஆங்கிலப் பாட வேளையில், கற்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இரண்டு மாணவர்களை ஏதேனும் பொது தலைப்பில் 2 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேச வைப்பதை நடைமுறைப்படுத்தி சுழற்சி முறையில் ஆங்கிலத்தில் பேசும் புலமையை உயர்த்த வழிவகை செய்யப்படும்.

> சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின் (Namakku Naame Thittam) கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் இணையதள வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள், தேவைப்படும் பள்ளிகளில் அமைக்கப்படும்.

> 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை 2023-2024-ஆம் கல்வியாண்டில் ரூ.3,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும். அதிகபட்சம் 400 ஆசிரியர்களுக்கு ரூ.12 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

> 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில், கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐடி-மெட்ராஸ், ஐஐஎம்-பெங்களூர், டெல்லி பல்கலைக்கழகம்) அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தலா ரூ.10,000 பரிசு: 2023-2024-ம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, தலா ரூ.10,000/- வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக தனியே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.

> சென்னைப் பள்ளிகளில் பயின்று மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று Joint Entrance Exam (JEE), Common Law Admission Test (CLAT), National Institute of Fashion Technology (NIFT) மற்றும் National Eligibility cum Entrance Test (NEET) போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசு கல்வி நிறுவனங்களில் மட்டும் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் (Tuition Fee) மட்டும் சென்னை மாநகராட்சியால் 2023-2024ம் நிதியாண்டு முதல் வழங்கப்படும். இது தொடர்பாக தனியே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.

> School Management Committee (SMC) கூட்டங்களின் போது (மாதத்திற்கு ஒருமுறை) பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் கற்றல் நிலை மற்றும் பள்ளிகளின் கல்வி மேம்பாடுத் திட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. 2023-2024ம் கல்வியாண்டில், ஆண்டுக்கு ஒருமுறை கல்வி மேம்பாடு குறித்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியையும், SMC கூட்டத்தின் போது இணைத்து செயல்படுத்தப்படும்.

> சென்னைப் பள்ளிகளில், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரவும், நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும், முதல் பாட வேலையின் போது 10 நிமிடம் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் (Happy Class) நடத்தப்படும். இவ்வகுப்பில் மாணவர்களுக்கு நன்நெறிப்பண்புகள் கற்பிக்கப்படும். இது சென்னை மாநகரப் பள்ளி மாணவர்களை நல்லொழுக்கம் மற்றும் படிப்பிலும் சிறந்து விளங்க உதவும்.

சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்படும். இம்மருத்துவ முகாமில் அனைத்து மாணவர்களும் ஆண்டுக்கு ஒரு முறை பயனடையுமாறு செயல்படுத்தப்படும், இதனால் மாணவர்களின் உடல் நலத்தை பேணிக்காப்பதால் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வழிவகை செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x