Published : 26 Mar 2023 02:29 PM
Last Updated : 26 Mar 2023 02:29 PM

ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்தது தவறு: அன்புமணி

தருமபுரியில் அன்புமணி பேட்டி.

தருமபுரி: நீதிமன்றம் ராகுலை கண்டித்து விட்டிருக்கலாம்; பதவியை பறித்தது தவறானது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாமக சார்பில் கட்சி கொடியேற்று விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தருமபுரி வந்தார். நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக தருமபுரி அடுத்த ராஜாபேட்டையில் அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியது: ''கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் ஏற்கெனவே பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாலைவனமாக மாறியுள்ளது. இந்நிலையில், மீண்டும் 91 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பாலைவனமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. நிலக்கரி தேவைக்காக தொடர்ந்து சுரங்கங்கள் வெட்டப்பட்டதால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இங்கு கிடைப்பது தரமற்ற நிலக்கரி. இதை மின் தயாரிப்புக்காக எரிப்பதன் காரணமாக அப்பகுதியின் சூழல் பாதிப்படைந்துள்ளது. தமிழகத்தின் ஓராண்டு மின் தேவை 18 ஆயிரம் மெகாவாட். ஆனால், ஓராண்டு மின் உற்பத்தி 35 ஆயிரம் மெகாவாட். ஏற்கெனவே மின் மிகை மாநிலமாக உள்ள தமிழகத்துக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஓராண்டுக்கு வழங்கும் 800 முதல் 1000 மெகாவாட் மின்சாரம் தேவையே இல்லை. இந்த மின்சாரத்தைப் பெற கடலூர் உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களின் நிலத்தடி நீர், சூழல் உள்ளிட்ட பலவற்றை இழந்து நிற்கிறோம். எனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிக்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் தவறான தகவல்களை பேசி வருகிறார். விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு திட்டமும் நமக்கு வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் காவிரியாற்றில் இருந்து கடலுக்கு சென்று வீணாகும் நீரில், ஆண்டுக்கு வெறும் 2 டிஎம்சி தண்ணீரை மட்டும் நீரேற்றும் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்ட பாசன தேவைக்கு வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். தவறினால், பாமக சார்பில் பெரும் போராட்டங்களை நடத்துவோம். தருமபுரி-மொரப்பூர் ரயில் பாதை இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளதை பாமக வரவேற்கிறது.

தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் 7 ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளால் 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 400 மீட்டர் நீளமுள்ள குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இவ்வாறு தொடர்ந்து விபத்துக்கள் நடக்கின்றன. இதற்கு தீர்வு கேட்டு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் அளித்துள்ளோம். விரைவில் தீர்வு ஏற்படும். தமிழக சட்டப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் மூலம் இதுவரை தமிழகத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலேயே மது அதிகம் விற்பனையாகும் மாநிலம் தமிழகம் தான். ஏழே முக்கால் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி வரை மாநில அரசு வருமானம் ஈட்டுகிறது. மதுவை விற்று அரசு வருமானம் ஈட்டுவது வேதனையானது. மாநில அமைச்சர் மது விற்பனையை குறைக்கவும் அதிலிருந்து மக்கள் விடுபடவும் பாடுபட வேண்டுமே தவிர, மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து அதை அதிகப்படுத்த நினைப்பது தவறு.

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் அளித்திருப்பது பெரிய தண்டனை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ராகுலை கண்டித்து விட்டிருக்கலாம். மேலும், இதை காரணம் காட்டி அவரது பதவியை பறித்ததும் தவறானது.'' இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி எம் எல் ஏ வெங்கடேஷ்வரன், முன்னாள் எம் எல் ஏ வேலுச்சாமி, கட்சியின் மாநில நிர்வாகிகள் அரசாங்கம், சண்முகம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x