Published : 26 Mar 2023 04:05 AM
Last Updated : 26 Mar 2023 04:05 AM
சென்னை: வாட்ஸ்-அப் வதந்திகளை மற்றவர்களுக்கு பரப்புவதால் சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, மாணவர்கள் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வுசத்யம் திரையரங்கத்தில் நேற்று நடந்தது. வெற்றி பெற்ற 4 குறும்படங்களின் இயக்குநர்களுக்கு இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
சென்னையில் அதிக அளவில் போதைப் பொருட்களை பறிமுதல்செய்த காவல் துறை குழுவினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.சென்னை காவல் துறை தயாரித்த ‘காமிக் தொடர்’ விழிப்புணர்வு புத்தகமும் வெளியிடப்பட்டது.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: போதைப் பொருட்கள் தடுப்பு: நடவடிக்கைக்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வாட்ஸ் அப்பில் வரும் தவறான செய்திகளை நம்பக் கூடாது. பகுத்தறிவோடு செயல்பட வேண்டும். வதந்திகளை நம்பி, அதை மற்றவர்களுக்கு பரப்புவதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
உண்மை செய்தியை விட, வதந்தி எளிதில் மக்களிடம் சேர்கிறது. எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசும்போது, ‘‘போதைப் பொருட்கள்குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும். குறும்படங்களை பள்ளி, கல்லூரிகளில் திரையிட்டு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு 300-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்தன. இதில் சிறந்த 4 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்’’ என்றார்.
கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ரம்யா பாரதி, காவல் துறை அதிகாரிகள், திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், குறும்பட இயக்குநர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT