Published : 23 Mar 2023 04:07 AM
Last Updated : 23 Mar 2023 04:07 AM

அரசம்பட்டி தென்னை, விளாத்திகுளம் முண்டு வத்தலுக்கு - புவிசார் குறியீடு: அரசின் முயற்சியால் விவசாயிகள் மகிழ்ச்சி

எம்.நாகராஜன் | எஸ்.கோமதி விநாயகம் | எஸ்.கே.ரமேஷ் |

உடுமலை / கோவில்பட்டி / கிருஷ்ணகிரி: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அரசம்பட்டி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, விளாத்திகுளம் முண்டு வத்தல் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மூலனூர் வட்டார பகுதிகளில் அதிக அளவில் விளையும் முருங்கையும் அதில் இடம் பிடித்துள்ளது. மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்கு ஏற்ற மண் வளம், குறைவான நீர் நிர்வாகம் ஆகிய காரணங்களால் ஆண்டுதோறும் முருங்கை சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

மூலனூர் முருங்கைக்கு ருசி அதிகம் என்பதால் விவசாயிகளால் சந்தைக்கு கொண்டு வரப்படும் முருங்கை, சென்னை, திருச்சி,கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலும் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் மூலனூர் பகுதியில் விளையும் ருசி மிகுந்த குட்டை முருங்கைக்கே இந்திய அளவில் கிராக்கிஅதிகம். இந்த மூலனூர் குட்டை முருங்கைக்கு புவிசார் குறியீடு கிடைக்கும் நிலையில் உற்பத்தியும் லாபமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முண்டு வத்தல்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் சுற்று வட்டாரப் பகுதிகள், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கோவில்பட்டி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் முண்டு வத்தல் மற்றும் சம்பா வத்தல் சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதி முழுவதும் கரிசல் மண் பரப்பு என்பதால், இம்மண்ணில் விளையும் முண்டு வத்தலில் ருசி, காரத்தன்மை அதிகமாக இருக்கிறது.

விளாத்திகுளம் வட்டத்தில் அதிகமாக விளையும் முண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு கேட்டு, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது வேளாண் பட்ஜெட்டில் புவிசார்குறியீடு பெற நிதி ஒதுக்கீடு செய்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “விளாத்திகுளம் வட்டத்தில் விளைவிக்கப்படும் முண்டு வத்தலுக்குஇந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது. புவிசார் குறியீடு கிடைத்தால் முண்டு வத்தலின் விற்பனை விலை அதிகரிக்கும். சர்வதேச அளவில் மதிப்பு கிடைக்கும். விவசாயிகள் பயனடைவர்” என்றார்.

அரசம்பட்டி தென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் மற்றும் நிலத்தடி நீர் பாசனம் மூலம் மாவட்டத்தில் 40ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இம்மரங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 5 கோடிதேங்காய்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

தென்னை விவசாயத்தை மையமாகக் கொண்டு தேங்காய் விற்பனை மண்டிகள், துடைப்பம், நார் தயாரிக்கும் சிறு தொழில்கள், கொப்பரை, தென்னை ஓட்டி பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சார்பு தொழில் மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, அரசம்பட்டி மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசம்பட்டி நாட்டுரக தென்னங்கன்று உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழமையான நாட்டுரகம்: இது தொடர்பாக தென்னை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியாளர் ஜே.கென்னடி மற்றும் விவசாயிகள் சிலர் கூறியதாவது: இந்தியாவிலேயே மிகவும் பழமையான நாட்டுரகத்தைச் சேர்ந்தது அரசம்பட்டி தென்னை. கடந்த 65 ஆண்டுகளில் 11 மாநிலங்களில் அரசம்பட்டி தென்னங் கன்றுகளை விவசாயிகள் அதிக அளவில் நடவு செய்துள்ளனர்.

பல்வேறு இடங்களில் அறுவடையாகும் தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் வரைதான் கெடாமல் இருக்கும். அரசம்பட்டி தேங்காய் 120 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பின்னர் கொப்பரையாகவும், விதைக் காய்களாகவும் பயன்படும் தன்மை கொண்டது. இச்சிறப்புகளால் குஜராத், டெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநில மக்கள் அரசம்பட்டி தேங்காயை அதிகளவில் உணவு மற்றும் பிறதேவைக்கு இங்கி ருந்து கொள்முதல் செய்கின்றனர். புவிசார் குறியீடு கிடைத்தால் மேலும் வரவேற்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தென்னை ஆராய்ச்சி மையம் தேவை: “அரசம்பட்டியில் தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும். விவசாயிகளை ஒருங்கிணைத்து தேங்காயில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வேண்டும்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் போச்சம்பள்ளி சிப்காட்டில் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை தொடங்க வேண்டும். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பும், அரசுக்கு வருவாயும் கிடைக்கும்” என அரசம்பட்டி தென்னை விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x