Published : 22 Mar 2023 04:41 AM
Last Updated : 22 Mar 2023 04:41 AM

வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் - வேளாண் செயலர் சமயமூர்த்தி தகவல்

சமயமூர்த்தி

சென்னை: தமிழகத்தில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதை கருத்தில் கொண்டு வேளாண் பட்ஜெட்டில் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்தார்.

வேளாண்மை பட்ஜெட் தொடர்பாக வேளாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் விவசாய வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் 72 சதவீதத்துக்கும் மேல் உள்ள சிறு, குறு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு சிறு, குறு விவசாயிகளின் வேளாண் பணிக்கு சிறிய இயந்திரங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிராமத்துக்கு 2 பவர் டில்லர் வீதம் 2,504 கிராமங்களுக்கு சுமார் 5 ஆயிரம் பவர் டில்லர்கள் வழங்கப்படவுள்ளன. அதுமட்டுமில்லாமல் டிராக்டர், அறுவடை இயந்திரங்களும் வழங்கப்படும். இதற்காக மத்திய, மாநில அரசுகளின் நிதியில் இருந்து ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், விளைந்த வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்காக விவசாயிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். குறிப்பாக வேளாண் பொருட்களை இருப்பு வைத்து விற்பதற்காக கூடுதலான கிடங்குகள் கட்டித் தரப்படும்.

மேலும், வேளாண் வணிகர்கள் கொள்முதல் செய்த வேளாண் பொருட்களை குளிர்சாதனக் கிடங்குகளில் வைப்பது, வங்கிகளில் கடன் பெறுவது, தேசிய வேளாண் சந்தை திட்டத்துடன் இணைப்பது போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நபார்டு வங்கியில் ரூ.500 கோடி கடன் பெற்று தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாண் கருவிகளை வாங்கி வாடகைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கக வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த இயற்கை வேளாண்மைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி ஊக்குவிக்கப்படும். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக சிறப்புத் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x