Published : 21 Mar 2023 03:51 PM
Last Updated : 21 Mar 2023 03:51 PM

2,504 கிராமங்களில் 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள்: தமிழக வேளாண் பட்ஜெட் 2023-ல் அறிவிப்பு

தென்னங்கன்றுகள் | கோப்புப் படம்

சென்னை: கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2,504 கிராமங்களில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் 2023-24-ல் வெளியிட்ட அறிவிப்பின் விவரம்: ஒவ்வொரு சிற்றூரும் தன் தகுதிக்கேற்ப தன்னிறைவு அடைய முடியும். தண்ணீர் வளத்திற்கு ஏற்பவும், மண்ணின் வளத்திற்கு ஏற்பவும், அந்தச் சிற்றூரில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், வேண்டிய மற்ற பணிகளையும் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.

ஊரக வளர்ச்சித் துறையோடு இணைந்து உழவர்களுக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி, ஒருமித்த, உள்ளடக்கிய வளர்ச்சியை இச்சிற்றூர்கள் பெறுவதற்கு அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் கைகோர்த்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் இத்திட்டம் 2,504 கிராம ஊராட்சிகளில் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

தொகுப்பாக 10 ஏக்கர் தரிசாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி பம்ப்செட்டுகள் இலவசமாக அமைத்துத் தரப்படும். மின் இணைப்பு கிடைத்தவுடன், மா, கொய்யா, நெல்லி போன்ற பல்லாண்டு பலன் தரக்கூடிய பழமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அதில் சொட்டு நீர்ப் பாசன வசதியும் மானியத்தில் நிறுவப்படும்.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், தென்னை மரங்கள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் மொத்தம் 15 இலட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக 2,504 கிராமப் பஞ்சாயத்துகளில் வழங்கப்படும்.

விவசாயிகளின் வயல்களில் 600 பண்ணைக் குட்டைகள் அமைத்து, கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யப்படும். மேலும் இப்பண்ணைக் குட்டைகளில் மீன்வளத்துறை மூலமாக மீன் குஞ்சுகள் வளர்த்து, கூடுதல் வருமானம் ஈட்டிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

300 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளின் வயல்களில், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து, அதில் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளும் இலவசமாக நிறுவப்பட்டு, அதில் சொட்டு நீர்ப் பாசன வசதியும் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.

ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசனக் குளங்கள், ஊருணிகள், வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி, பாசன நீர் கடைமடை வரை செல்வதற்கு வழிவகை செய்யப்படும்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் விளைபொருட்களை உலர வைத்து சேமிப்பதற்கு வசதியாக 250 உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் கட்டித் தரப்படும். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தடுப்பணைகள், கசிவுநீர்க்குட்டைகள், வயலுக்குச் செல்லும் சாலைகள் போன்ற பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படுவதால், சாகுபடி நிலப் பரப்பு உயர்ந்து இந்த கிராமங்கள் தன்னிறைவு அடையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x