Published : 21 Mar 2023 03:10 PM
Last Updated : 21 Mar 2023 03:10 PM

இதுவரை 6.71 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் தகவல்

சேதம் அடைந்த பயிர்கள் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 6.71 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.783 கோடி வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட் 2023-24-ஐ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது குறித்து பட்ஜெட் உரையில் அவர் கூறும்போது, “இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து உழவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 40 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். தமிழ்நாடு அரசால் 1,695 கோடி ரூபாய் காப்பீட்டுக் கட்டண மானியமாக வழங்கப்பட்டு, ஆறு லட்சத்து 71 ஆயிரம் விவசாயிகளுக்கு இதுவரை 783 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு வடகிழக்குப் பருவமழை, 2023 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 82 ஆயிரம் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக 163 கோடியே 60 லட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் காடுகள் உருவாக்குவது இயற்கையை மேம்படுத்தவும், மண்மீது பசுமைப் போர்வை போர்த்தி, பூமியை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் குளிர்விப்பதற்காகவும்தான். அது கணிசமான அளவிற்கு வருவாயை ஈட்டித் தரும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு, சந்தனம், செம்மரம், மகோகனி, தேக்கு போன்ற 77 இலட்சம் உயர் இரக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, 30,000 எக்டர் பரப்பில் நடப்பட்டுள்ளன. மின்னணு வேளாண்மையில், விதையில் தொடங்கி, விற்பனை வரை, 22 முக்கிய வேளாண் சேவைகள், ‘உழவன் செயலி’ மூலம் நல்ல முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவையின்முன் வைக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கைகளைப் பொருத்தவரை, ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறவேண்டிய இனங்களைத் தவிர, அவற்றில் இடம் பெற்றிருந்த மற்ற அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன

இந்த அரசு பதவியேற்றபோதே, வேளாண்மைத் துறை என்றிருந்த துறையின் பெயர், வேளாண்மை-உழவர் நலத் துறை என்று பெயர் மாற்றப்பட்டு, உழவர்தம் உயர்வையே மையமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

கோட்டையில் அமர்ந்துகொண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வடிவமைப்பது ஏற்புடையது அல்ல என்பதை அறிந்ததன் காரணமாக, முதல்வரின் அறிவுரைக்கேற்ப, திண்டுக்கல், திருநெல்வேலி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, சென்னை, சிவகங்கை மாவட்டங்களுக்கு நானும் துறை சார்ந்த அலுவலர்களும் சென்று, சுற்றுவட்டாரத்தில் இருக்கிற மாவட்டங்களின் உழவர்கள், வேளாண் வணிகர்கள், ஏற்றுமதியாளர்களை அழைத்துப் பேசி, அவர்கள் கருத்துக்களுக்கும் இடமளிக்கும் வகையில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை இம்மாமன்றத்தில் குறிப்பிட விரும்புகிறேன்” என்று அமைச்சர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x