Published : 03 Sep 2017 12:57 PM
Last Updated : 03 Sep 2017 12:57 PM

கோவையில் ஒரே நாளில் 593 மி.மீ. மழை பதிவு: பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் பாதிப்பு

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. ஒரே நாளில் 593 மி.மீ .மழை பதிவானதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளா னார்கள்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் அடித்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து லேசான மழை பெய்யத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. பல பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு மழை கொட்டியது.

இதனால், டவுன்ஹால், ரயில் நிலைய சாலை, லங்கா கார்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரேஸ் கோர்ஸ், காந்தி பார்க், அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து ஓடியது. பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியதால், நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள். அவிநாசி மேம்பாலத்தில் மழை நீர் அதிக அளவு தேங்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. கோவை லங்கா கார்னர் பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய வேனிலிருந்த 2 பேரை, பொதுமக்கள் மீட்டனர். மேலும், பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரக் கிளைகள் உடைந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது.

மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): கோவை தெற்கு 92, சூலூர் 90, சின்கோனா 67, சின்னகல்லூர் – 63, வால்பாறை 55, பொள்ளாச்சி 50, பெரியநாயக்கன்பாளையம் 49, வேளாண் பல்கலைக்கழகம் 27, அன்னூர் 25, விமானநிலையம் 15.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 592.60 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சராசரி மழையளவு 49.38.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x