Published : 18 Mar 2023 10:45 AM
Last Updated : 18 Mar 2023 10:45 AM

அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை நிலைப்பாடு: ஓ.எஸ்.மணியன், நாராயணன் திருப்பதி கருத்து

நாராயணன் திருப்பதி மற்றும் ஓ.எஸ்.மணியன் | கோப்புப்படம்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதாக வெளியான செய்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை - அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திடீரென பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று (மார்ச் 17) நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்கினார்.

தற்போது, கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, அங்கேயே முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டிய சூழல் இருப்பதால், தமிழகத்துக்கு அவ்வப்போது வர முடியாது என்றும், முக்கியமான கட்சி கூட்டமாக இருந்தால் மட்டுமே இங்கு வந்து பங்கேற்க முடிவு செய்துள்ளதாகவும் அண்ணாமலை கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், பாஜக நிர்வாகிகள் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது, கர்நாடக மாநில தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, மே மாதம் 10-ம் தேதி ஒரு முக்கிய முடிவை அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை கூட்டத்தில் தெரிவித்ததாக பாஜக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக அவரது முடிவு இருக்க கூடும் எனவும், பெரும்பாலும், பழனிசாமி அல்லாத புதிய கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் என்ற அறிவிப்பை அண்ணாமலை அறிவிக்கலாம் எனவும் பாஜகவினர் தெரிவித்தனர்.

ஒருவேளை பழனிசாமி அல்லாத கூட்டணியை அமைத்தால், பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை ஒருங்கிணைத்து புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு நேரிடும் என பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், "நல்ல, திரைக்கதை, வசனத்தை நான் படித்தேன். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நடைபெற்ற ஒரு விஷயத்தை வேண்டும் என்று இட்டு கட்டி எழுவது தவறானது. இது எங்களின் உட்கட்சி விவகாரம். நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக் கொள்வதை பொது வெளியில் பேசுவதும், குறிப்பாக இல்லாத ஒன்றை இருப்பதாக சித்தரிப்பதை நான் கண்டிக்கிறேன். இதற்கு கருத்து சொல்வதே தவறுதான். கட்சி கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்படும். தேர்தல் காலத்தில் தான் கூட்டணி. இப்போது தேர்தல் இல்லை. தேர்தல் குறித்து பேச இது நேரமும் இல்லை" என அவர் கூறினார். இதனை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக தான் தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை ஏற்கும். முடிவு செய்யும். யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட்டு என்பதை முடிவு செய்யும் கட்சி அதிமுகதான்" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x